‘C / O காதல்’ சினிமா விமர்சனம்.
‘அந்தாலஜி’ பாணியில் கதைகளை உருவாக்கி, ‘அடடே’ கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்!
அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பிவிட, சிறுவனுக்கு காதல் தோல்வி!
அந்த பிராமணப் பெண்ணுக்கு, அடியாளாய், ரவுடியாய் ஊர் சுற்றும் அந்த கிறிஸ்தவ இளைஞன் மீது காதல் உருவாகிறது. பெண்ணின் அப்பா மதத்தை காரணம்காட்டி அவளுக்கு வெறொரு மணமகனுடன் கல்யாணம் செய்து வைக்க, அவனுக்கும் காதல் தோல்வி!
மதுக்கடையில் வேலை செய்யும் அந்த இளைஞனுக்கு அந்த இஸ்லாமியப் பெண்மீது காதல். பின்னாளில் அவள் விலைமாது என்கிற அதிர்ச்சிக்கு ஆளாகிறான். காதலின் ஆழம் அவர்களை கல்யாணம் நோக்கி நகர்ந்த திடீரென அவள் உலகத்தை விட்டுப் போகிறாள்!
கல்யாணம் கை கூடாததால், ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி, அவமானம் சுமந்து நிற்கும் அந்த 49 வயது ஆசாமியை, கணவரைப் பிரிந்து 20 வயது மகளுடன் வாழ்கிற 42 வயதான அந்த பெண்மணி தன் வாழ்க்கைத் துணையாக ஏற்க முன்வருகிறாள்.
களிமண்ணில் கடவுள் சிலைகள் செய்கிற ஒரு கூலித் தொழிலாளி, தன் முதலாளியால் அவமானப் படுத்தப்பட்டு, சொந்தமாக தொழில் தொடங்கி சோதனைக்குள்ளாகிறான்.
தனித்தனியாகப் பயணிக்கும் இந்த கதைகளில் வருகிற கதை மாந்தர்களுக்குள் இருக்கிற சம்பந்தம் என்ன என்பதே கிளைமாக்ஸ்!
தெலுங்கில் வெளிவந்து, ஹிட்டடித்த ‘C/O கஞ்சரபாலம்’ படத்தை, தமிழில் ‘ரீ மேக்’கியிருக்கிறார் ஹேமம்பர் ஜஸ்டி
பழனியாக வருகிற என். தீபன், ராதாவாக வருகிற சோனியா கிரி, தாடியாக வருகிற வெற்றி, சலீமாவாக வருகிற மும்தாஜ் சொர்கர், ஜோசப்பாக வருகிற கார்த்திக் ரத்னம், பார்கவியாக வருகிற ஐரா, வேலுவாக வருகிற நிஜேஷ், சுனிதாவாக வருகிற ஸ்வேதா… அனைவரிடமிருந்தும் இயல்பான நடிப்பு.
‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் தன் அலட்டலற்ற நடிப்பால் ஈர்த்த வெற்றி, இந்த படத்தில் ‘தாடி’ என்ற கதாபாத்திரத்தில், எளிமையான நடிப்பால் உயரம் தொட்டிருக்கிறார்.
தென்றலாய் நகரும் காட்சிகளுக்கு அவசியமில்லை என்பதை உணர்ந்து, பின்னணி இசையில் துளியும் பரபரப்பு கூட்டாமல் விட்டதற்காக இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியை பாராட்டலாம்!
வசனங்களில் நீலன் கே. சேகர் கவனிக்க வைக்கிறார்.
மதம், கடவுள் நம்பிக்கை, பெண்ணியம் என திரைக்கதையோட்டத்தில் சிலபல சங்கதி சொல்ல முற்பட்டிருப்பதை தவிர்த்துப் பார்த்தால் கேர் ஆப் காதல் – தாலாட்டு!