தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடித்துவிட்ட காமெடி நடிகர் யோகிபாபு. காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். இவர் லீட் ரோலில் நடிக்க தர்மபிரபு, கூர்கா படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், யோகிபாபு முதன்மை ரோலில் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘மண்டேலா’. சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. அதோடு, இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்து படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டதாம்.
இன்றைய காலகட்டத்தில் சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடியிலோ, டிவியிலோ ரிலீஸ் செய்வதே புத்திசாலித்தனம் என திரையுலகம் நம்புகிறது. அதன்படி, மண்டேலா படமும் நேரடியாக டிவியில் வெளியாக இருக்கிறது.
நமக்குக் கிடைத்த தகவல்படி, யோகிபாபுவின் மண்டேலா படமானது நேரடியாக விஜய் டிவியில் வெளியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 04ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விஜய் டிவியில் நேரடியாக படம் ஒளிபரப்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் படம் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறதாம். எப்படியும், ஏப்ரல் 09ஆம் தேதி ஓடிடிக்கு வந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
இதுவரை மூன்று படங்கள் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகியிருக்கிறது. முதலாவதாக, பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவான படம் ‘நாங்க ரொம்ப பிசி’. இயக்குநர் சுந்தர்.சி-யின் அவினி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, சன் தொலைக்காட்சியில் நேரடியாக 2020-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம், 2016ல் கன்னட மொழியில் வெளியான மாயாபஜார் படத்தின் தமிழ் ரீமேக். சன் டிவியில் நேரடியாக வெளியாகவே உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ‘ புலிக்குத்தி பாண்டி’ படம் சன் டிவியில் நேரடியாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
மூன்றாவதாக, சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கியவர் ஹலீதா ஷமீம். இவர் இயக்கத்தில் உருவான ‘ஏலே’ படமும் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமுத்திரகனி மற்றும் மணிகண்டன் நடிப்பில் தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்ட நாஸ்டாலஜிக் நினைவுகளோடு படம் இருந்தது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்தப் படமும் விஜய் டிவியில் வெளியான பிறகு, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸானது. அதுபோலவே, மண்டேலா படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

