இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது.
இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானிடம் தமிழில் பேசி விட்டு அருகே இருந்த படத்தின் நாயகனிடம் இந்தியில் பேசுகிறார் நெறியாளர். சட்டென புருவம் உயர்த்தும் ஏ.ஆர்.ரகுமான், “இந்தி?” எனக்கேட்டுவிட்டு இந்தியில் பேசியவரிடமிருந்து விலகிப் போய் தூர நிற்கிறார். கரகோஷம் அரங்கை அதிர வைக்கிறது.
மேடையிலிருந்து இறங்குகையில் நெறியாளரை பார்த்து, “தமிழ் தெரியுமான்னு அப்பவே கேட்டேன்ல!” என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.’அந்த இன்னொரு நபரை வரவேற்கவே இந்தி.. மன்னித்து விடுங்கள்’ என்கிறார் நெறியாளர்.
தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அக்காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மகாதானம் என்கிற தொடர்வண்டி நிறுத்த அறிவிப்பில் ஏணி போட்டு ஏறி ‘கா’ என்கிற எழுத்தை மட்டும் அழித்து ‘ஹா’ என எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் ஏற்கனவே வட எழுத்துகளை ஊர் பெயர்களில் சேர்க்கும் வேலை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இந்த இந்தி எதிர்ப்புணர்வுச் செயல் நடந்ததால் அதற்கான வரவேற்பு பலமாக இருக்கிறது.