மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக நடிகர் ஆனந்தராஜ் பதிவு

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் அடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த நாலு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொல்லனாத் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மிக கனமழை விடாமல் பெய்து வருவதால், சென்னையின் முக்கியமான பகுதிகளான கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, பல்லாவரம், அனகாபுத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது. இதோடு மின்வெட்டும் இருப்பதால் மக்களின் அன்றாடப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றவும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும் முழு மூச்சில் பணியாற்றும் வந்தும் கூட, பல இடங்களில் இது போன்ற பணிகள் வேகமின்றி தேக்கநிலையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, இரண்டாவது தெருவில் வசித்து வரும் நடிகர் ஆனந்தராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நேற்று இரவு முழுவதும் பெய்து வரும் கனத்த மழையால் எங்கள் தெருவில் இருக்கும் மரம் ஒன்று வேரோடு சரிந்து ரோட்டில் விழுந்து கிடக்கிறது. விழுந்த மரம் ரோட்டை அடைத்துக் கொண்டு கிடப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் அந்த மரத்தை அகற்றி  போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

Leave a Comment