ஃபைட் க்ளப் விமர்சனம்

 

வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப்.

வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”.

எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த தப்பு தவறுக்கும் போகாமல் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் வாழும் மக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்ற அவர்களின் சத்தமும் கூக்குரலும் யாருக்கும் கேட்குதோ இல்லையோ தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்ற முற்படும் எந்நாள் இயக்குனருக்கும் அது கேட்பதே இல்லை என்பது மட்டும் புலனாகிறது.

ஒரு வேளை தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்டுவதைப் போல் வடசென்னை பகுதியில் போதை மற்றும் ரவுடிச கலாச்சாரம் அதிகமாகக் கூட  இருக்கலாம்.  ஆனால் அது ஏன் அப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கள ஆய்வு செய்யும் திரைப்படங்களோ, வெறும் கண்களுக்குத் தெரியாத அதன் பின்னணியில் இருக்கும் சமூக அவலங்கள், அல்லது அசல் அரசியல் காரணிகள், அல்லது நிலவரைவியலில் இருக்கும் சிக்கல்கள் இப்படி எதையுமே முன்னிட்டு தமிழ் சினிமா பேசுவதே இல்லை.

வடசென்னை என்றாலே வில்லன்கள் தானா..? என்கின்ற கூக்குரல் சற்று அதிகமானதும் தமிழ் சினிமா செய்து கொண்ட மாற்றம் நாயகனையும் அதே பின்புலம் உடையவனாக படைத்தது மட்டும்தான். மற்ற புறக் காரணிகள் எதுவுமே மாறவில்லை.  இப்படி காலம் காலமாக வடசென்னையின் வரைபடத்தை  வரைந்த கோடுகள் மேலேயே அழுத்தி அழுத்தி வரைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமா, மீண்டும் ஒரு புதிய பேனா கொண்டு அந்த வரைபடத்தை மீண்டும் வரைந்திருக்கிறது. அந்த புதிய பேனாவின் பெயர் “ஃபைட் க்ளப்”.

வடசென்னையை மையமாகக் கொண்டு வெளியான முக்கியமான திரைப்படங்களான அல்லது முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்களான பொல்லாதவன், வடசென்னை, மெட்ராஸ், ஜெயில் மற்றும்  டைனோசர்ஸ்  (அட்டக்கத்தி விதிவிலக்கு) திரைப்படங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கும். கேங்க் அடிதடி என்று ஒரு கும்பல் சுற்றிக் கொண்டு இருக்கும். நாயகன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பான். ஒரு கட்டத்தில் நாயகனுக்கு நெருக்கமான உறவுகள் பாதிக்கப்படும்.  பொல்லாதவனில் தனுஷ் அப்பா பாதிக்கப்படுவதைப் போல, வடசென்னையில்  ராஜன் பாதிக்கப்படுவதைப் போல், மெட்ராஸில் கலை பாதிக்கப்படுவதைப் போல் ஜெயில் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நண்பன் பாதிக்கப்படுவதைப் போல் டைனோசர்ஸ்  திரைப்படத்தில் நாயகனின் அண்ணன் பாதிக்கப்படுவதைப் போல். வேறு வழியின்றி நாயகன் அந்த கேங்குடன் மோத வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவான். இதனால் நாயகனின் வாழ்க்கை தலைகீழாக மாறும். இறுதியில் நாயகன் பெரும்பாலும் வெற்றி பெறுவான். (ஜெயில் திரைப்படம் தவிர்த்து)

ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடப்பதும் அதுவே தான்.  பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானம்  தன் ஏரியா பசங்களை வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்று கனவு காண்பவன். கால் பந்தாட்டத்தில் பிஸ்தாவாக இருக்கும்  செல்வத்தை பெரிய போட்டிகளில் விளையாட வைத்து அவன் வாழ்க்கையை மாற்ற முயலுகிறான். அந்த நேரத்தில் கஞ்சா விற்கும் கேங்குகள் தங்களுக்கு தடையாக இருக்கும் பெஞ்சமினைப் போட்டுத் தள்ளுகிறது.  செல்வாவின் வாழ்க்கையும் திசைமாறிப் போகிறது.  கஞ்சா பொட்டலங்கள் விற்கும் கேங்குகள் மீது தன் வன்மத்தை புதைத்து வளர்க்கும் செல்வத்திற்கு அதை காட்டுவதற்கான நேரமும் காலமும் அமைந்ததும் அதை வெளிக்காட்டுகிறான்.  துரோகத்திற்கும் குள்ளநரித்தனத்திற்கும் பலியாகிறான். அவனுடைய வாழ்க்கை மேலும் திசை மாறுகிறது.  இறுதியில் என்ன ஆனது என்பதே ஃபைட் கிளப் சொல்லும் கதை.

நாயகனாக வரும் செல்வம் – விஜயகுமாரின் கதாபாத்திர வடிவமைப்பு போதமை இல்லாமல் இருக்கிறது.  அமைதியான சிறுவன் கோபக்கார இளைஞனாக மாறுகிறான் என்கின்ற ஒற்றை வரைபட உயர்வை மட்டுமே கொண்டதாக இருக்கிறது. அந்த மனமாற்றம் மற்றும் உடல் மாற்றத்திற்கான காட்சிப் படிமங்களும் இல்லாததால், அந்த பாத்திர வடிவமைப்பு ஒரு முட்டாள்தனமான முரடன் என்பதாக சுருங்கிப் போகிறது. வில்லனாக வரும் ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) கதாபாத்திர வடிவமைப்பு ஒப்பீட்டளவில் சிறப்பானதாக இருக்கிறது. கோபத்தில் அண்ணனைக் கொல்வதும்,  பின்னர் துரோகத்திற்கு இரையாவதும், தன்னுடைய பழிவாங்கும் படலத்தை குள்ளநரியின் தந்திரத்துடன் செயல்படுத்த காய் நகர்த்துவதுமாக சிறப்பான வடிவமைப்பு. அவினாஷ் ரகுதேவன் செமத்தியாக நடித்திருக்கிறார்.

அது போல் கிருபாகரனாக வரும் சங்கர் தாஸும் சிறப்பாக நடித்திருக்கிறார். சாதாரண பொட்டலம் மடிக்கும் ரவுடியாக இருந்து, கவுன்சிலராக உயர்ந்து, தன்னைச் சுற்றி இருக்கும் ஆபத்துகளுக்கு நடுவே கபடி ஆடுவதும், கருவறுப்பதும் என சிறப்பான கதாபாத்திரம். செவ்வனே செய்திருக்கிறார் சங்கர் தாஸ். பொட்டலம் மடிப்பவனுக்கும் கவுன்சிலருக்குமான உடல்மொழி வித்தியாசங்கள் அநாயசமாக கை வருகிறது. வாழ்த்துக்கள். பெஞ்சமினாக நடித்திருக்கும் கார்த்திக் சந்தானம் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் நினைவில் நிற்கிறார்.

இது போக துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரஸாக் ஆக வரும் வடசென்னை அன்பு,  கார்த்தியாக வரும் சரவணவேல், உதயாவாக வரும் சார்பட்டா சாய் தமிழ் என எல்லோருமே தங்களின் இருப்பை நியாயப்படுத்துவது போல் நடித்திருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையும் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும் கிருபாகரனின் புதுவிதமான எடிட்டிங் யுக்திகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி இருக்கின்றன.  ஒட்டு மொத்த படத்தையும் உயிரோட்டமுள்ளதாக மாற்றி இருப்பது இந்த மூன்று தொழில்நுட்ப காரணிகள் மட்டும் தான்.

இயக்குநர் அபாஸ் அ ரஹமத் தனது முதல் படத்திலேயே மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலர் டோனும், இசைக் கோர்வையும் வெட்டு யுக்திகளும் படத்தின் மேக்கிங்கை தரம் மிக்கதாக மாற்றுகின்றன. கதாபாத்திர வடிவமைப்பையும், கதையையும் அதனோடு சேர்த்து திரைக்கதையையும் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் “ஃபைட் கிளப்” சென்னையின் முக்கியமான கிளப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும்.

இப்பொழுது வெறும் அடிதடி, சண்டை, கேங்க் வார், ரூட் தலை கொண்டாட்டம், கால்பந்து பகை, துரோகம், பழிவாங்கல் என்று நாம் பார்த்து சலித்துப் போன ஏரியாக்களிலேயே டிராவல் செய்து ஃபைட் கிளப்பில் சண்டை போட்டு களைப்பும் சோர்வும் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்த  ஒரு போட்டியாளனைப் போல் பார்வையாளனை வெளித் தள்ளுகிறது.

ஃபைட் கிளப் – அடி வாங்க தைரியம் இருப்பவர்களுக்கு மட்டும்

மதிப்பெண் 2.75 / 5.0

Related posts

Leave a Comment