தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை.
பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும் நதி, கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழலில் காதலனோடு சேர்ந்து கருவைக் கலைக்கப் போராடும் கீதா என நான்கு கதாபாத்திரங்களின் உதவியோடு வாழ்வில் இப்படி வேறு வேறு காலகட்டங்களில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் கூட அவர்களும் ஏதொவொரு காரணத்திற்காக ஒரு ஆணை சார்ந்து கையில் ஏந்திய சிலம்போடு நீதி கேட்டுக் கொண்டிருக்கும் கண்ணகியாகத் தான் இருக்கிறாள்” என்று விவரிக்கிறது திரைக்கதை.
கலையாக வரும் அம்மு அபிராமி கல்யாணத்திற்காக காத்து இருக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாசமான அப்பா, கண்டிப்பான அம்மா இந்த இருவருக்கும் இடையில் அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப உறவாடி ஒட்டிக் கொள்ளும் செல்ல மகள் கதாபாத்திரத்தை சிரத்தையின்றி அழகாக செய்திருக்கிறார். “நானா கேட்டேன் என்னைப் பெக்கச் சொல்லி” என்று தாயிடம் வெடித்து சண்டையிடும் காட்சியில் தன்னால் சிறப்பாக நடிக்கவும் முடியும் என்பதை நிருபிக்கிறார். நேத்ராவாக வரும் வித்யா பிரதீப், தனக்கு எடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் உண்மை நிலை கண்டு அழும் போதும், காதலனால் கைவிடப்பட்டு கையறு நிலையில் நடந்து செல்லும் போதும் மனதை கனக்கச் செய்கிறார்.
நதியாக நடித்திருக்கும் ஷாலினி சோயா ஆண் வர்க்கத்தின் மீதான தன் காட்டத்தையும் ஆளுமையையும் அசாதாரணமாகக் காட்டி ஆண் வர்க்கத்தை கொஞ்சம் அச்சுறுத்துகிறார். அதிலும் காதலில் கசிந்துருகி மண்டியிட்டு மோதிரம் காட்டி தன் காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாசகம் கேட்கும் லிவிங் பாட்னரை எட்டி உதைத்து கேசுவலாக ஒரு குத்தாட்டம் ஆடும் போது நமக்கு கொலைவெறி ஏறுகிறது என்பதே அவரின் அற்புத நடிப்பிற்கு சான்று. கீதாவாக வரும் கீர்த்தி பாண்டியன் வெளித் தள்ளிய வயிறும், வெறித்த பார்வையுமாக காட்சிகளை நிரப்புகிறார். அவரின் கண்களில் இருக்கும் வெறுமை மற்றும் வலியின் காரணங்கள் அறிவதற்கான காத்திருப்பு கொஞ்சம் அதிகமாக இருந்த போதிலும், அதை அறிந்து கொள்ளும் அந்த நிமிடங்களில் அறுத்து எறியப்பட்ட சிசுவை நாய் நக்கிக் கொண்டிருக்கும் போது நம் மனதை ஏதோ கவ்விப் பிடிப்பதை உணர முடிகிறது.
இப்படி தனித்தனி கதைகளை அடுக்கி ஒவ்வொரு கதைக்குமான தொடர்பை சிறு சிறு புள்ளிகளில் கோர்த்த இயக்குநரின் புத்திசாலித்தனத்திற்கு பாராட்டுக்கள். “நான் கீதா பேசுறேன்.. இப்ப நான் கர்ப்பமா இருக்கேன் என்பதும், சச்சினா…? தோனியா..? என்கின்ற கேள்விக்கு தோனி என்கின்ற பதிலும், பரிசாகக் கொடுக்கப்படும் தோனி புகைப்படமும், என்னடா அம்மா ங்கொம்மான்னுட்டு எவனும் உங்க அப்பனை மாதிரி பாத்துக்குறேன்னு சொல்ல மாட்டீங்களாடா..? என்பதும் இன்னும் சில காட்சித் துளிகளும் கதையை புரிந்து கொள்வதற்கான தன்மையை தங்களின் அகத்துக்குள் ஒளித்து வைத்து விளையாடி இருக்கின்றன என்பதை படத்தின் க்ளைமாக்ஸ் முடிச்சி அவிழும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நதியாக வரும் ஷாலின் கோயல் வறட்டுப் பிடிவாதத்துடன் திருமணத்தையும் காதலையும் புறக்கணிக்கும் போது அந்தக் கதாபாத்திரம் மீது தோன்றும் கோபம், அந்த புறக்கணிப்பிற்கான காரணம் தெரியும் போது நதியின் மீதான பரிதாபமாக மாறுகிறது. அது போல கீதாவாக வரும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அவரின் காதலனாக வரும் இயக்குநர் யஷ்வந்த் இருவருமே ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் இருப்பதும், குறைந்தபட்ச சண்டைகள் கூட இல்லாமல் இருந்தாலும், வயிற்றில் வளரும் அந்த சிசுவை, கீதாவின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அப்புறப்படுத்த துடிக்கும் போது நம் புஜங்களும் அவர்களுக்கு எதிராக புடைக்கின்றன. அந்த புடைக்கின்ற புஜங்களையும் வெதும்புகின்ற மனங்களையும் க்ளைமாக்ஸ் காட்சியில் அடித்துப் பெய்யும் மழையும் அதைத் தொடர்ந்து வரும் க்ளைமாக்ஸ் காட்சியும் குளிர்வித்து சாந்தப்படுத்துகின்றன. இருப்பினும் அந்த வளரிளம் சிசுவை நாய் புசிக்கத் துடிக்கும் நொடிகள் ஆறாத வடுவாக ரணமாக நெஞ்சில் நிலைத்துவிடுகிறது.
சில நேரங்களில் வாழ்க்கை கொடூரமானது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. முதல் பாதியில் உணர்ச்சிகளும் கேள்விகளும் கோபங்களும் குழப்பங்களும் நிறைந்து அலைகடல் என ஆர்ப்பரிக்கும் மனம், இரண்டாம் பாதி துவங்கி ஆர்ப்பரிக்கும் மழையை தொடர்ந்து வரும் கடைசி காட்சிக்குப் பின்னர் தெள்ளத் தெளிந்த நீரோடையாக சலனமற்று சாந்தி அடைகிறது.
திருமணத்தினால் பாதுகாப்பு இல்லை என்கின்ற சூழலிலோ அல்லது ஒரு ஆணிடம் பாதுகாப்பு இல்லை என்கின்ற சூழலிலோ ஓடத் துவங்கும் ஒரு பெண், மீண்டும் தனக்கான பாதுகாப்பை இன்னொரு திருமணத்திலோ அல்லது இன்னொரு ஆணிடமோ கண்டு கொள்ளும் மாயையான தருணங்களைக் காட்டி, ஆக அந்த திருமணமும் பாதுகாப்பு தேடிச் செல்லும் அந்த ஆணும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே இத்திரைப்படம் முன்னிறுத்துகிறதோ என்கின்ற கேள்வியும் எழுந்து அடங்குகிறது.
கலையின் அம்மாவாக வரும் மெளனிகாவும் தன் மகளின் திருமணம் பாதுகாப்பானதாகவும் பகட்டானதாகவும் இருக்கவே ஆசைப்படுகிறாள். அவளின் அப்பாவாக வரும் மயில்சாமியின் கனவும் அதுவாகவே இருக்கிறது. கலையின் சித்தி மகளாக வரும் பெண் திருமணம் முடிந்து நிறைவான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறாள். ஆக திருமணங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் யார் கையிலும் இல்லை என்கின்ற கருத்தை முன்னிருந்தப் பார்க்கிறதா..? இத்திரைப்படம் என்று பல கேள்விகள். அதற்கான தெளிவான பதில் இல்லாதது படத்தின் ஒரு குறை.
ஷான் ரகுமானின் இசை படத்திற்கு ஒருவித துல்லியத்தன்மையையும், ஒரு விதமான புதிர் தன்மையையும் ஒருங்கே கொடுக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்து கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. சரத்தின் எடிட்டிங் கதையை புதிர் தன்மை கெடாதவாறு ஒருங்கிணைந்து வெவ்வேறு காலகட்ட கதைகளை குழப்பமின்றி சொல்வதற்கு உதவி இருக்கிறது. E 5 எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கை மூன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக எம்.கணேஷ் மற்றும் ஜே.தனுஷ் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். யஷ்வந்த் கிஷோர் எழுதி இயக்கியதோடு மட்டுமின்றி கீதா கதாபாத்திரத்துடன் ஜோடியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கதை. இன்னும் வழக்கத்திற்கு வராத, ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே கண்ட வித்தியாசமான திரைக்கதை, வலிமையான பெண் கதாபாத்திரங்கள், அவர்களுக்கு சப்போர்ட்டாக சிறப்பாக நடித்திருக்கும் மெளனிகா, மயில்சாமி, யஷ்வந்த், வெற்றி போன்ற துணை கதாபாத்திரங்களின் நடிப்பு இவை படத்தை தரமாக மாற்றுகின்றன. மேலும் எடுத்துக் கொண்ட கதைக்கருவும் கதைக்களமும், அது பேசி இருக்கும் விசயமும் “கண்ணகி” திரைப்படத்தை முக்கியமான திரைப்படமாக மாற்றி இருக்கிறது.
கண்ணகி – முழுமையடையவில்லை என்றாலும் தரிசனம் சிறப்பு.
மதிப்பெண் – 3.0 / 5.0