முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இப்படி எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல், நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆயிரம் பொற்காசுகள்”. இப்படம் அதன் நோக்கமான நகைச்சுவையை நமக்குப் பரிசளித்திருக்கிறதா…? இல்லையா…? என்பதை பார்ப்போம்.
“ஆயிரம் பொற்காசுகள்” அடங்கிய ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அதை அரசாங்கத்திற்கு தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்வதற்கான போராட்டமே “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் ஒன்லைன்.
அந்த ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு கிடைக்கிறது…? எப்படி கிடைக்கிறது..? அதை ஆண்டு அனுபவிக்க நினைக்கும் மைய கதாபாத்திரங்களுக்கு எப்படி எந்த ரூபத்தில் எல்லாம் சிக்கல் வருகிறது…? பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் இறுதிகட்டத் தீர்வையும் இப்படத்தின் திரைக்கதை விளக்குகிறது.
ஆரம்பத்திலேயே சொன்னது மாதிரி சிரிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே ஒற்றை குறிக்கோளாக படக்குழுவினர் எடுத்துக் கொண்டு இருப்பதால் கதாபாத்திர வடிவமைப்பு பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இலவசங்களை அரசாங்கத்திடம் இருந்து வாங்கிக் கொண்டு, தேவைக்கேற்ப ஆடு கோழிகளை திருடி அடித்து சமைத்து சாப்பிட்டு உடம்பை வளர்த்துக் கொண்டிருக்கும் தாய் மாமன் சரவணன், அவனோடு வந்து இன்னொரு உதவாக்கரையாக ஒட்டிக் கொள்ளும் மருமகன் விதார்த். இருவருமே ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட்டு பொழுதைக் கழிக்க, பட்டணத்தில் இருந்து வந்த நாயகனைப் பார்த்ததும் காதலில் விழுகிறாள் பெட்டிக்கடை நடத்தும் நாயகி. அவளுடைய சித்தி மகளுக்கும் நாயகன் மீது மோகம். அவளும் டாவடித்து திரிய, திரைக்கதை இஷ்டத்து தெருத் தெருவாக திரிகிறது.
இதற்கு இடையில் காமெடி என்ற பெயரில் அந்த கன்றாவி காதலை வைத்து அடிக்கும் கூத்துகளும், போதாக்குறைக்கு நாயகியின் அம்மாவை வைத்து அடிக்கும் கூத்துகளும் அரங்கேறி நமக்கு உடலெங்கும் ஒருவித ஒவ்வாமை ஒட்டிக் கொள்ளும் நேரத்தில் மையக்கதையான புதையலை நோக்கி கதை செல்கிறது. ஒரு கட்டத்தில் புதையல் கைக்கு கிடைக்கப் பெறுவதும், அதை அடைவதில் தொடரும் வன்மமும் ஒரு கொலையை அரங்கேற்றுவதற்கான சூழல் உருவாக, கதையும் திரைக்கதை அமைப்பும் இப்படத்தில் அப்படி எதுவுமே சீரியஸாக நடந்துவிடாது என்று கட்டியம் கூற, நாமும் எந்த பதட்டமோ ஆர்வமோ இன்றி தேமே என்று திரையை வெறித்துக் கொண்டு இருக்கிறோம்.
எதிர்பார்த்தது போல் அங்கு ஒன்றுமே நடக்காமல் புஸ் என்று அந்தக் காட்சி முடிய, மீண்டும் படக்குழுவினர் நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.
மீன் வியாபாரியாக வரும் ஹலோ கந்தசாமி நம்மை ஆங்காங்கே சற்று சிரிக்க வைக்கிறார். குழி தோண்டும் பணி செய்யும் ஜார்ஜ் மரியான் பிணத்திற்கு குழி தோண்டும் இடத்தில் கூட காமெடி என்கின்ற பெயரில் சண்டையெல்லாம் செய்து ஒரு கூத்தடிக்கிறார்கள்.
கிடைத்த பொற்காசுகளை உருக்கி நகையாக மாற்ற கொல்லனைத் தேடிப் போகும் காட்சியில் இருந்து படக்குழுவினரின் முயற்சிக்கு ஓரளவிற்கு பலன் கிடைக்கத் துவங்க, நாமும் ஆங்காங்கே சிரிக்கத் துவங்குகிறோம். ரிப்பீட் மோடில் வரும் காதலியுடன் ஓடிப் போகும் எபிசோடுகளும் சிரிப்பை வரவழைக்கின்றன. ஒருவரின் பைக்கை மற்றொருவர் பிடித்துக் கொண்டு வீதி உலா செல்வது போல் வரும் காட்சிகளும் சிரிப்பை வரவழைக்கின்றன.
அது போல் ஆயிரம் பொற்காசுகளை பிரித்துக் கொள்வதற்காக பங்குகள் ஒவ்வொன்றாக கூடிக் கொண்டு சென்று, ஒட்டு மொத்த ஊரும் பங்குக்காக வந்து நிற்பதும் கலகலப்பு.
மேலும் பன்னெடுங்காலமாக காமெடிப் படங்களுக்காகவே அமைக்கப்படும் இறுதிகட்ட சேசிங் காட்சிகள் “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்திலும் உண்டு. அந்தக் காட்சிகள் மட்டும் தான் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. கிட்டத்தட்ட கடைசி இருபது நிமிடங்களுக்கு குறையாமல் வரும் அந்த சேசிங் காட்சிகள் நம்மை வஞ்சிக்காமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கின்றன.
படத்தில் குழி வெட்டும் தொழிலாளியாக வரும் ஜார்ஜ் மற்றும் கூட்டாளி கதாபாத்திரம், ஆசாரி கதாபாத்திரம், இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன் கதாபாத்திரம், பாம்பு பிடிக்க வரும் கதாபாத்திரம் , திண்ணையில் படுத்து உறங்கும் வட இந்திய பிச்சைக்காரன் கதாபாத்திரம் போன்றவை மைய கதாபாத்திரங்களான சரவணன், விதார்த், அஞ்சலி நாயர், செம்மலர் அன்னம் கதாபாத்திரங்களை விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு, கலகலப்புக்கும் கட்டியம் கூறுகின்றன.
அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார். விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
கதையிலோ எந்த கதாபாத்திரத்துடனோ ஒரு எமோஷ்னல் கனெக்ட் கிடைக்காததும், எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஃபாலோ செய்ய முடியாததும், பொற்காசுகள் யாருக்கு கிடைத்தாலும் ஓகே.. அல்லது யாருக்குமே கிடைக்கவில்லை என்றாலும் கூட ஓகே தான் என்பதான மனநிலைக்கு பார்வையாளர்கள் வந்துவிடுவதும் படத்தின் பலவீனங்கள். ஜார்ஜ், அவரின் கூட்டாளி, ஹலோ கந்தசாமி, பட்டறை நடத்தும் ஆசாரி, இன்ஸ்பெக்டர் பாரதி கண்ணன், கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ் சேசிங் காட்சிகள் இவையெல்லாம் படத்தின் பலங்கள்.
சின்ன சின்ன விசயங்களுக்கு கூட உங்களுக்கு சிரிப்பு வரும் என்றால், எதையும் ஆராய மாட்டீர்கள், அனுபவிக்க மட்டுமே முயல்வீர்கள் என்றால், ஆபிரம் பொற்காசுகள் உங்களுக்கு முதல்பாதியில் ஆறடி குழி தோண்டிய அசதியையும், ஆயிரம் பொற்காசுகள் கிடைத்த ஆனந்தத்தையும் ஒருங்கே தரும். அப்படி இல்லாதவர்களுக்கு “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படம் ஆங்காங்கே சிரிப்புகளை சிதறடிக்கும் வெறும் சில்லரை காசுகள் மட்டுமே.
மதிப்பெண் 2.75 / 5.0