சபாநாயகன் விமர்சனம்

ஒரு ஜாலியான பையனின் காதல் அனுபவங்கள் தான் இந்த சபாநாயகன் திரைப்படம்.

ச.பா.அரவிந்த் ஆன நாயகன் அசோக் செல்வனுக்கு பள்ளிகாலத்தில் ஒரு காதல், கல்லூரி காலத்தில் ஒரு காதல், சிங்கப்பூரிலிருக்கும் பெறோரைப் பார்க்கச் செல்லும் போது ஒரு காதல், எம்.பி.ஏ படிக்கும் போது ஒரு காதல் என தடுக்கி விழும் இடத்திலெல்லாம் ஒரு காதல் செய்கிறார்.  பார்க்கும் பெண்கள் எல்லோர் மீதும் காதலில் விழும் 2கே கிட்ஸ் கதாபாத்திரம்.  சிரித்துக் கொண்டே ஜாலியாக செய்திருக்கிறார்.

ஹீரோயின்களாக வரும் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகிய மூவரில் முதல் இடம் மேகாவிற்கு. வந்து செல்வது சில காட்சிகள் மட்டும் தான் என்றாலும் கூட அவர் வந்து செல்லும் காட்சிகள் க்யூட்டான கவிதைகள் போல இருப்பதால் காட்சிகளையும் அந்தக் காதலையும், அதனோடு மேகாவின் அழகையும் ரசிக்க முடிகிறது. செகண்ட் இன்னிங்க்ஸில் மீண்டும் வரும்  கார்த்திகா முரளிதரன் இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  தன் ப்ரெண்ட் ஏமாற்றப்பட்டாள் என்று தெரிந்து கொந்தளிக்கும் போதும், நீ ஏண்டா முதல்லயே சொல்லல என்று கண் கலங்கும் போது மேம்பட்ட நடிப்பு. கல்லூரி கால ஹீரோயினாக வரும் சாந்தினிக்கு முறைப்பதும் பின் சிரிப்பதும் பிறகு காணாமல் போவதுமான காதலி கதாபாத்திரம்.  முறைத்துக் கொண்டு திரியும் பொழுதுகளில் ரசிக்க முடிகிறது.

ஜெய்சீலன், ராம், அருண் மூவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.  கான்ஸ்டேபிளாக நடித்திருக்கும் மயில்சாமி ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார். திவ்யாவாக வரும் விவியா சந்த் காதலுக்கு உதவுவதோடு, நம்மையும் காதலிக்கத் தூண்டுகிறார். மைக்கேல் தங்கதுரை தன் இருப்பை நியாயப்படுத்தி இருக்கிறார்.

லியோன் ஜேம்ஸின் இசை படத்தை விறுவிறுப்பாக்க உதவவில்லை.  பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. கணேஷ் சிவா இன்னும் கூட காட்சிகளை கச்சிதமாக கத்தரித்திருக்கலாம்.  அரவிந்த் ஜெயபாலன், மேகவாணன் இசைவாணன் மற்றும் ஐயப்பன் ஞானவேல் தயாரித்து இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனுக்கு இது முதல் படம். ஜாலியான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர், பல்வேறு காலகட்ட காதல்களை அடுக்கி திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் புதுமையில்லாத காட்சிகளும், ஈர்ப்போ தவிப்போ இல்லாத காதலும் நம்மிடையே எந்தவிதமான உணர்வுகளையும் எந்த இடத்திலுமே ஏற்படுத்தாமல் கடக்கிறது.  காதல் தொடர்பான திரைப்படத்தில் துளியும் காதல் இல்லை. ஆங்காங்கே சில காமெடிகள் மட்டும் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது.

மொத்தத்தில் ஒரு ஆட்டோகிராப் போன்று வந்திருக்க வேண்டிய சபாநாயகன், காதலை டேக் இட் ஈஸியாக ட்ரீட் செய்த விதத்தினால் காதல் கதைகளின் தொகுப்பாக இல்லாமல், சுவாரஸ்யமற்ற காதல் காட்சிகளின் தொகுப்பாக மட்டும் எஞ்சி நிற்கிறது.

சபாநாயகன் – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

மதிப்பெண் 2.5 / 5.0

Related posts

Leave a Comment