கன்னியாகுமரி லெமூர் கடற்கரை விவகாரம் குறித்து முதலமைச்சருக்கும் மனு கொடுத்த விஷால் மேனேஜர், சுற்றுலா ஆணையரிடம் இருந்து வந்த பதில் கடிதம்
கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் V.ஹரிகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
கடந்த 06: 05: 2024 அன்று நடிகர் விஷால் அவர்களின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தபோது அங்கே லெமூர் கடற்கரையில் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த பயிற்சி மருத்துவ மாணவ மாணவிகள் கடலில் சிக்கி உயிருக்கு போராடி அதில் சிலர் இறந்தார்கள் என்பது செய்தியாக. அந்த துயரமான நிகழ்வு நடக்கும்போது ஹரிகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் அங்கு இருந்த உள்ளூர் நபர்கள் உதவியுடன் ஒரு சிலரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மற்ற மாணவ மாணவியர்கள் காப்பாற்ற முடியாமல் இறந்தார்கள் என்பதும் செய்தியாகவும் வெளிவந்தது.
இதனால் தமிழ்நாடு முதலமைச்சர், கவர்னர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு ஹரிகிருஷ்ணன் மனு ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதில், அவசர தேவைக்கு நாங்கள் தொடர்பு கொண்ட மீட்புக் குழுவினர் எவரும் தகுந்த நேரத்திற்கு வராமல் போனது மனவேதனையை அளிக்கிறது என்றும் இது மட்டுமில்லாமல் தமிழகத்தின் எதிர்கால மருத்துவர்கள் எங்கள் கண்முன்னே இறந்து விட்டனர். அந்த சம்பவத்திலிருந்து நானும் என் குடும்பமும் மனவேதனையில் இருந்து வெளியே வர முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறோம் இதுவரை அக் கடற்கரையில் சுமார் 40 பேருக்கு மேல் மாட்டி பாதிக்கப்பட்டும் 15 பேருக்கு மேல் இறந்து இருக்கிறார்கள் என்ற செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அப்போதே அதற்க்கான ஒழுங்குமுறை பாதுகாப்பு வசதிகள் மீட்ப்புபணி குழுவினர்கள் அருகில் இருக்குமாறு செய்து இருந்தாலோ, எச்சரிக்கை பலகை இருந்து இருந்தால் இப்போது நாம் ஐந்து வருங்கால மருத்துவர்களை இழந்து இருக்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.
எனவே இக்கடிதம் எழுதுவதின் நோக்கம் மீண்டும் இது போல் எதிர்கால இறப்புகள் நிகழாமல் இருக்க அக்கடற்கரை மக்கள் பயன்பாட்டை சுற்றுலா தளமாக கருதினால் அங்கு வரும் மக்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டியும் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணி குழுவினர் என அனைத்தையும் அருகாமையில் அமைத்திட வேண்டி கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக திரு சி.சமய மூர்த்தி தமிழ் நாடு சுற்றுலாத் துறை ஆணையர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் அபாய எச்சரிக்கை பலகை கணபதிபுரம் பேரூராட்சியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அலையில் சிக்குபவர்களை காப்பாற்ற கயிறு ,மிதவை போன்ற அவசர பாதுகாப்பு உபகரணங்களுடன் காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடலோர காவல்படை காவலர்கள் கண்காணிப்பு பணியில் உள்ளதாகவும், பேரூராட்சி பணியாளர்களும் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் இருவரும் பாதுபாப்பிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழக அரசு ஆம்புலன்ஸ் 108 சேவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் வராத அளவிற்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் உறுதியளித்து கடிதம் மூலம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அக்கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே போல் அனைத்து சுற்றுலாத் தளங்களை நம்பி மக்கள் வரும் பொது உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து இருந்தால் மிகப்பெரிய உதவியாகவும் ,பாதுகாப்பாகவும் இருக்கும்.