பராரி – திரை விமர்சனம்

இது காதல் கதை. அதை சமூகமும் இனமும் எப்படி பந்தாட முற்படுகின்றன என்பது இயல்பான திரைக் களம்.

தமிழ் சினிமாவில் சாதிச் சண்டைகள் தொடர்பான கதைகளுக்கு பஞ்சம் இல்லை. பராரியில் இப்படி சாதி சண்டைகள் தொடங்கி மொழிச் சண்டையாக வளர்ந்து முடிகிறது படம். இந்த இரு சண்டைக்குள்ளும் சிக்கி தவிக்கும் ஒரு ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்தில் இந்த பராரிமனதுக்குள் மத்தாப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளூர் கிராமத்தில் ஆதிக்க சக்தி மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருப்பது ஒரே குலதெய்வம். வருடாவருடம் அதை கும்பிடக் கூட இரு தரப்பும் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்த இரு தரப்பின் மோதல் தெரிந்தும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரி சங்கர் மீது காதல் ஆகிறாள் சங்கீதா. இந்தக் காதலை வேரறுக்க சங்கீதாவின் தந்தை தனது உறவு பையனுக்கு மகளை கொடுப்பதாக நிச்சயம் செய்து விடுகிறார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஜூஸ் கம்பெனிக்கு அந்த ஊரின் இரு தரப்பு மக்களும் பயணப்படுகிறார்கள். இதில் காதல் ஜோடியும் அடக்கம்.

அங்கே தேவையில்லாமல் கன்னட இளைஞன் ஒருவன் நாயகியிடம் வம்பிழுக்க, அதை நாயகன் தட்டிக் கேட்க, கன்னட இளைஞனோ வெறி கொண்டு தனது கட்சி படையுடன் வந்து தமிழ் மக்களை தாறுமாறாக அடித்து நொறுக்குகிறான். இதில் தனியே சிக்கிக்கொண்ட காதல் ஜோடியை அடித்து துவைத்ததோடு மான பங்கமும் செய்கிறான். இதன் பிறகு என்ன ஆகிறது என்பதுரத்தமும் சதையுமான திரைக்கதை.

படத்தின் சிறப்பம்சமே அதன் நட்சத்திரங்கள் தான். புதுமுகங்கள் என்ற அடையாளமே தெரியாமல், நமக்கும் தோன்றாமல் ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டர்களில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

குறிப்பாக ஊர் பகைக்கு பயந்து காதலை ஒதுக்கி வைக்கும் ஹரி சங்கரும். என்ன ஆனாலும் சரி, நீதான் என் காதலன் என்று ஒவ்வொரு கட்டத்திலும் காதலை உருவாக்க துடிக்கும் சங்கீதா கல்யாணும் படத்தின் ஜீவ நாடிகள்.எழில் பெரிய வேடி இயக்கியிருக்கிறார். சாதியும் மொழியும் காதலை சிதைக்கும் இடங்கள் கண்களில் ரத்தம் வர வைப்பவை. அந்த கொடூர கிளைமாக்சில் ஷான் ரோல்டனின் இசை நின்று பேசுகிறது.

Related posts

Leave a Comment