ரெட்ரோ – திரை விமர்சனம்

1960-களில் தூத்துக்குடி நகரில் தாதாவாக வலம் வந்த ஜோஜு ஜார்ஜ், கடத்தல் தொழிலிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவர். இவரது வேலைக்காரர் ஒருவர் எதிரிகளால் கொல்லப்பட, தப்பிப் பிழைக்கும் அவரது மூன்று வயது மகனை ( சூர்யா ) தாதாவின் மனைவி வளர்க்கப் பிரியப்படுகிறார். அரைகுறை மனதுடன் அதற்கு சம்மதம் தருகிறார் தாதா.

இப்படி வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படும் சூர்யா, வளர்ப்பு தந்தையின் கடத்தல் தொழிலையும் கற்றுக் கொள்கிறார்.இதற்கிடையே சிறு வயது முதலே அவ்வப்போது தன்னுடன் நட்பு பாராட்டி வந்த பூஜா ஹெக்டே மீது சூர்யாவுக்கு காதல் வருகிறது.
ஆனால் காதலி யோ , பழைய வாழ்க்கையை அடியோடு தலை முழுகி விட்டு வந்தால் மட்டுமே திருமணம் என்கிறார். சூர்யா அதற்கு சம்மதம் சொல்ல, இப்போது அந்த காதல் மணமேடை வரை வந்திருக்கிறது. இதற்கிடையே இப்படி எல்லாம் சுமுகமாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் வியட்னாமுக்கு தந்தை அனுப்பிய விலை உயர்ந்த கடத்தல் பொருள் சூர்யாவின் சூட்சுமத்தால் போய் சேராமல் இருக்க…

அதைக் கேட்க தனது அடியாட்களுடன் மண மேடைக்கே வருகிறார் தந்தை. கடத்தல் பொருள் விஷயத்தில் மகன் மறுக்க,ஆத்திரத்தில் மணமகளை வெட்டி சாய்க்க தந்தை அரி வாளை ஓங்க, அதற்குள் மகன் முந்திக்கொண்டு தந்தையின் ஒரு கையை துண்டாக்குகிறான்.திருமணம் நிற்கிறது. சூர்யா இப்போது ஜெயிலில். காதலி பூஜாவோ தொலைதூர பயணம் மேற்கொண்டு விடுகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் ஜெயிலில் இருக்கும் சூர்யாவுக்கு தெரிய வர, அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யா, ஒரு வழியாக காதலியை கண்டுபிடித்து விடுகிறார். அங்கேஅவரது அமைதியும் பொறுமையும் பூஜா விடம் இருந்து கிரீன் சிக்னலை தர…

இதற்கிடையே சூர்யா தன் காதலியை தேடி அந்தமான் வந்த தகவல் அவரது வளர்ப்பு தந்தைக்கு சொல்லப்பட… தந்தையும் பரிவாரங்களுடன் வந்து சேர…
அப்புறம் என்ன ஆனது என்பது கதைக்களம். அல்ல, அல்ல, போர்க்களம். சூர்யாவின் வருகைக்குப் பிறகு அந்த தீவில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதையும் நெஞ்சம் நெக்குருக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த கதைக்கு சூர்யாவை தவிர இன்னொரு ஹீரோவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கேரக்டராகவே புகுந்து விளையாடியிருக்கிறார்.
வளர்ப்பு அப்பா என்றாலும், அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்க மகன், காதலிக்காக கொலைக்கு கூட அஞ்சாத தீவிரம், ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளி, என சூர்யாவின் பல்வேறு முகங்களை அடுத்தடுத்த பிரேம்களில் பார்க்க முடிவது இனிய அனுபவம். சண்டை காட்சிகளில் அவர் காட்டும் ஆவேசம் அந்த கேரக்டருக்கான மகுடம். சிரிக்காமலேயே நடனம் ஆடுவது இனி(ய ) சூர்யா ஸ்பெஷல்.
நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாக வந்து கவர்கிறார். தீவில் தன்னை தேடி கண்டுபிடித்த காதலனை அவர் கையாள்வது தனித்துவம் மிக்க அழகு.

வளர்ப்பு அப்பாவாக, தாதாவாக ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் குறைவான நேரங்களில் வந்தாலும் மனதில் நிறைவாக நின்று போகிறார்கள்.

நாசரின் மகனாக வரும் வில்லனுக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது இன்னும் அழகு.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா தீவுகளை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இரண்டு கதைகள், அதனுடன் மற்றொரு கிளைக்கதை என படம் பயணித்தாலும், ரசனைக்கு பஞ்சம் இல்லாத காட்சிகள் படத்தை ரசிகர்களின் கொண்டாட்டமாக்கி விடுகிறது.
ரெட்ரோ, சூர்யப் பிரகாசம்.

Related posts

Leave a Comment