
நாயகி சிந்தியா லூர்டே தனது 10 வயது மகளுடன் தனது தோழியை சந்திக்க ஊரிலிருந்து சென்னை வருகிறார். தோழியின் வீட்டுக்கு கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் புறப்படுபவர், ஆட்டோ டிரைவர் செய்த குளறுபடியால் நகரின் ஒதுக்குப்புறத்தில் சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்யும்
சக்திவாசுவின் வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மகளை தொலைத்து விடுகிறார். அதோடு கையோட கொண்டு வந்த விலைமதிப்பற்ற கைப்பை ஒன்றையும் மிஸ் செய்து விடுகிறார்.
இப்போது அவர் வெளியே எங்கேயும் போக முடியாது. மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க வேண்டும். மகளுக்கு நிகரான அந்த கைப்பையையும் கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டும் அவருக்கு சாத்தியமானதா என்பதற்கு பதில் சொல்கிறது பரபரப்பான கிளைமாக்ஸ்.
ஹீரோயினாக ‘அனலி’ என்ற கேரக் டரில் சிந்தியா லூர்துவே நடித்திருக்கிறார். தெரியாத்தனமாக வில்லனின் குடோ னுக்குள் மாட்டிக் கொண்ட நிலையிலும் அஞ்சாமல் எதிர்த்து போரிடும் அந்த போராட்ட குணம்
அவரது கேரக்டரை உயர்த்தி பிடிக்கிறது. வில்ல கும்பலிடம் தாயும் மகளுமாய் மாட்டிக் கொண்ட நிலையில் இவர் எடுக்கும் அதிரடி ஆக்க்ஷன் நிஜமாகவே அதிரடி மேளா.
வில்லன்களில் சக்தி வாசு தனித்துவ நடிப்பில் தனித்து தெரிகிறார்.
கபீர் துகான்சிங், அபிஷேக் வினோத் என்ற அடுத்த நிலை வில்லன்களும் ஓகே ரகம்.
மாவட்ட கலெக்டராக வந்து வில்லன்களின் விசுவாச பிரஜை யாக மாறிவிடும் கேரக்டரில் இனியா, நடிப்பில் மீண்டும் நல்வரவு சொல்ல வைக்கிறார்.
ஆட்டோ டிரைவராக ஜென்சன் திவாகர், அவரது பிரியாணி நண்பராக கிளி சிவா காமெடி போர்ஷனை கவனித்துக் கொள்கிறார்கள்.
நடிப்பு என்ற பெயரில் நடந்து கொண்டே இருந்தாலும் தேர்ந்த முகபாவங்களை காட்டி அசத்தி விடுகிறார் இளங்கோ குமாரவேல். போலீஸ் கமிஷனர் ஆக மேத்யூ வர்கீஸ் காக்கி சட்டை கம்பீரம்.
சிந்தியாவின் மகளாக வரும் ஷிமாலி குடோ னுக்குள் அவ்வப்போது ஒளிந்து கொள்ளும் வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
அறிமுக இயக்குனர்
தினேஷ் தினா எழுதி இயக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் ரொம்பவே சொதப்பியவர், சிந்தியாவை வீறு கொண்ட வேங்கையாக காட்டத் தொடங்கியதில் இருந்து கதைக்குள் ரசிகர்களை கொண்டு வந்து விடுகிறார். திரைக்கதையில் போதிய தெளிவு இல்லை என்றாலும், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அதை சுலபத்தில் மறக்கடித்து விடுகிறது. எல்லாம் சுபமாக முடிந்து சிந்தியா யார் என்று தெரியவரும் அந்த கிளைமாக்ஸ் மட்டும் கைதட்டத் தோன்றுகிறது.
-அனலி, சூடு.
