விஜய் சாரின் வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி – ‘விசாரணை கைதி’ பட விழாவில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் மகேந்திரன்

வி.ஜி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர். ராஜேந்திரன் படத்தொகுப்பு செய்ய, அசால்டு மதுரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கலைக்குமார் மற்றும் ஜி.சரவணன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 18 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்.வெங்கடேஷன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “பத்திரிகை, ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து, வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் நரேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. கூடிய விரைவில் திரையில் வெளியாக உள்ளது, நன்றி.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரா பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மிக சவாலாக இருந்தது. காமினேஷன் அதிகம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு கஷ்ட்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சண்டைக்காட்சிகளைப் பார்த்த பிறகு நான் யார் ? என்பது உங்களுக்கு தெரியும். பேரரசு சார் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். படம் வெளியானால் என் திறமை உங்களுக்கு தெரியும், இந்த 2026 ஆம் ஆண்டு நான் யார் என்பது தெரியும். சண்டைக்காட்சிகளை பாருங்கள், பிடித்திருந்தால் பாராட்டுங்கள், நன்றி.” என்றார்.

படத்தின் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம், இந்த விழாவுக்கு வந்திருக்கும் பேரரசு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. திருப்பாச்சி-யில் இருந்து அவரது படங்களை பார்த்து வியந்திருக்கிறேன், அவர் இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு சந்தோஷம். சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் சாரை பிடிக்கவே ரொம்ப கஷ்ட்டப்பட்டோம், அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் மாஸ்டர் மகேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி. யுடியூபையே கலக்கிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் வந்த உடன் விழா கலைக்கட்டி விட்டது. நம்ம கொடுக்கும் கண்டெண்டை பேச மாட்டார், வேறு ஒரு கண்டெண்டை பேசுவார். அவர் வந்ததும் மகிழ்ச்சி. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரை சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். படத்தின் கேமரா பணியும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலாசிரியர்கள் சரவணன் மற்றும் கலைக்குமார் இருவரும் பாடல்களை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு ரொம்ப நன்றி. அவரை நான் பார்த்ததே இல்லை, இன்று தான் பார்க்கிறேன். போனில் மட்டும் தான் பேசுவார். நல்லா பண்ணுங்க, ஒன்று இரண்டு அதிகமானாலும் பரவாயில்லை முடித்துக் கொடுத்துட்டு போங்க, என்று சொல்வார். நாங்களே பல முறை அழைத்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார். அதற்கு காரணம் இயக்குநர் மணிகண்டன் சார் தான். அவர் மிக சிறப்பாக பணியாற்றினார். இவரைப் போல் அமைதியான இயக்குநரை நான் பார்த்ததே இல்லை. ஒருவரையும் திட்டாமல் வேலை வாங்குவார். எனக்கு அவர் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.” என்றார்.

படத்தின் கதாநாயகி ரித்விக்கா ஸ்ரேயா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழ் அதிகம் பேச மாட்டேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெங்கடேஷன் சார் மற்றும் இயக்குநர் மணிகண்டன் சாருக்கு நன்றி. உன்னி சொன்னது போல் தான், இயக்குநர் மணிகண்டன் சார் ரொம்பவே அமைதியானவர், யாரையும் திட்ட மாட்டார். யாராவது தவறு செய்தால் கூட பரவாயில்லை, மறுபடியும் பண்ணுங்க பண்ணுங்க, என்று சொல்லி ஊக்கம் கொடுப்பார். எனக்கு இது இரண்டாவது படம், ஸ்டண்ட் வராது ஆனால் என்னை வைத்து சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். நான் பயத்துடன் தான் கிரவுண்டில் நின்றேன், அப்போது மதுரா சார் வந்தார், பயப்படாதீங்க, உங்களால் முடியும், என்று சொல்லி என்னை ஸ்டண்ட் பண்ண வைத்தார். ஸ்டண்ட் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேமரா மேன் சார் என்னை அழகாக காட்டியிருக்கிறார். என்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவருக்கு நன்றி. உன்னி உள்ளிட்ட என் உடன் நடித்த சக நடிகர்களுக்கு நன்றி. தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னை இந்த துறைக்கு வர அனுமதித்த என் பெற்றோர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.” என்றார்.

பாடலாசிரியர் கலைக்குமார் பேசுகையில், “மேடையில் இருக்கும் சான்றோர்களுக்கும், அரங்கத்தில் இருக்கும் சான்றோர்களுக்கும் மாலை வணக்கம். விசாரணை கைதி படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. நான்கும் வெவ்வேறு ரகங்களில் நன்றாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் அனைவரும் நன்றாக பண்ணியிருக்காங்க. இயக்குநருக்கு முதல் படமாக இருந்தாலும், முதல் படம் போல் தெரியாமல் மிக சிறப்பாக பண்ணியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம், வேலை கொடுப்பதற்கு முதல் நாளே ஊதியத்தை கொடுத்து விடுவார். பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடமை ஒப்பந்தம் செய்த போது, அவர்களுக்கான ஊதியத்தை கொடுத்துவிட்டு மறுநாள் தான் பாட வைத்தார்கள். அவர்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இப்படி தான் செய்தார். இவரை போன்ற தயாரிப்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

பாடலாசிரியர் ஜி.சரவணன் பேசுகையில், “இந்த அழகான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கும் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் இதில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பாடல் எழுதும் போதே ரசிகர்கள் மனதில் வரிகள் நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறேன். இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடையும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஊடகத்தினர் எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் சேகர் பேசுகையில், “விசாரணை கைதி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாட்டாமை படம் அப்போ பாத்திருப்பீர்கள், அந்த படத்தில் குட்டி பையனாக திடீரென்று வந்து சாட்சி சொல்லுவார். யார்டா அந்த குட்டி பையன் என்று நாம் ஆச்சரியப்படுவோம், அவர் இங்கே வந்ததற்கு நன்றி. திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி அந்த வரிசையில் நான் பிறந்து வளர்ந்த தர்மபுரி என்ற தலைப்பில் படம் எடுத்த பேரரசு சாருக்கு என் இரண்டாவது நன்றி. சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் ஐயாவுக்கு நன்றி. யுடியூப் சூப்பர் ஸ்டார் கூல் சுரேஷுக்கு நன்றி. நம்ம தயாரிப்பாளர் வெங்கடேஷன்ன், எங்க இருக்கிறார் என்று தெரியாது. எங்களை சிறப்பாக பார்த்துக்கொண்ட அவருக்கு நன்றி. இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி. பாடலாசிரியர், ஹீரோ அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் பேசுகையில், “நான் அரசு ஊழியர், சுகாதாரத்துறையில் இருந்தேன். மதுரையில் பிறந்தேன். நாடகம், விழிப்புணர்வு படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் சென்னை வந்து பாரதிராஜா சார் பள்ளியில் பயின்று நடிப்பு கற்றுக்கொண்டேன். அங்கே பேரரசு சார், பாக்யராஜ் சார் வருவாங்க. என்னுடைய எழுத்துகளை பார்த்தார்கள், வேற லெவலில் இருக்கே, முன்னாடியே ஏன் வரல, என்று சொல்வார்கள். பிறகு பாராதிராஜா சார் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதே போல் நடித்தேன். செல்லாக்காசு என்ற படத்தில் நடித்தேன், ஒரு பக்கம் காலே இல்லாதது போல் நடித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் படத்தில் நடித்துவிட்டு மற்றொரு இயக்குநரை நான் வியந்து பார்த்தேன் என்றால் அது மணிகண்டன் சார் தான். அவர் திருப்தியே ஆக மாட்டாரு. பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார், அவர் நினைத்தது போல் வரவில்லை என்றால் விடவே மாட்டார். அவருக்கு நிறைய விசயங்கள் தெரியும், அவரை ஏமாற்றவே முடியாது. சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், மணிகண்டன் சாரும் நிச்சயம் சாதிப்பார். படத்தில் ஒரு காட்சி இருக்கிறது, அதை பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள். இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.சுந்தராஜன், பாக்யராஜ் ஆகியோர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஜெயிக்கும். நானும் அரசு பணியில் இருந்து திரையுலகத்திற்கு வருகிறேன், உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துகள் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விகடன் பேசுகையில், “எனக்கு நடிக்க தான் தெரியும் பேச தெரியாது. இருந்தாலும், எங்கள் விழாவுக்கு வந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் பேசுகையில், “எங்கள் சேலம் ஆர்.ஆர் தொழிலாளர்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹீரோ உன்னி கிருஷ்ணன் என் நெருங்கிய நண்பர். மகேந்திரன், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முக்கியமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய நன்றி. இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் தயாரிப்பது சாதாரண விசயம் இல்லை. கே.ராஜன் சார் இன்று நம்மிடம் இல்லை. அவர் சிறிய படங்களுக்காக நிறைய பேசியிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது, பெரிய படங்களின் வருகையினால் சிறிய படங்கள் மக்களிடம் சேர முடியாமல் போகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெங்கடேஷன் சாருக்கு பாராட்டு. ஹீரோ உன்னி கிருஷ்ணன் சிறப்பாக நடிப்பார். அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தார். அவருடைய உழைப்புக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும்.

விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார். அஜித் சார் கார் ஓட்ட போய் விட்டார். இப்படி ஒரு நிலையில், நீங்கள் எல்லாம் திரைப்படத்துறையை தூக்கி நிறுத்த வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. பேரரசு சார் எவ்வளவு பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கிறார். இவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு கடவுள் ஆசியால் வெற்றி கிடைக்க வேண்டும்.” என்றார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், “உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சிரித்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்க இந்த படத்தை சப்போர்ட் பண்ண வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர்களில் பேரரசு சார் ஒருவர். மக்களுக்கான படத்தை கொடுத்தவர், இப்போது பல படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் எப்படி அழகாக இருக்கிறதோ அதுபோல் தமிழ்ச்செல்வன் சார் அழகு. பசிக்கும் அனைவருக்கும் அவர் சோரு போட்டு இருக்காரு, அவரை பார்த்தது மகிழ்ச்சி. ஹீரோ உன்னி பிரதர், தன்னம்பிக்கையோடு இருக்கிறார். காவல்துறை உடையில் மிக பொறுத்தமாக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் அவர் நினைத்தது கிடைத்ததா என்றால் அது தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் அவர் பல பெரிய படங்களை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கேமரா மேனின் பணி மிக சிறப்பாக இருந்தது. சண்டைக்காட்சிகள் சிறப்பு, ஸ்டண்ட் மாஸ்டர் அண்னாவின் வலி எனக்கு புரியுது, அவரை சினிமா கைவிடாது. தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, தம்பி நாம சேர்ந்து ஒரு படம் பண்ட்றோம் என்று சொன்னார், மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். இன்றைய நம்முடைய முதல்வர் பல தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைத்தவர், எனவே நீங்களும் இந்த சினிமாவில் வெற்றி பெறுவீர்கள்.

திரைத்துறைக்கு ராஜ்மோகன் அண்ணா வந்திருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் பலரிடம் பேசியிருக்கிறார். பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியிருக்கிறார். கஷ்ட்டப்படுபவர்களிடம், எளியவர்களிடம் அதிகம் பழகியிருக்கிறார். அவர் இந்த பொறுப்புக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். நம்ம சிஎம், நான் பொதுவாக எந்த தேர்தலையும் பெரிதாக பார்த்ததில்லை. ஆனால், இந்த தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தினேன், அவருக்கு என்ன நடக்கிறது, அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். இந்த வெற்றி அவருக்கான வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி. அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு பேசினார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துகள். கூல் சுரேஷ் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் தைரியமாக பேசுவார், சினிமாவை அதிகம் நேசிப்பார். சின்ன படமோ, பெரிய படமோ அனைத்து படங்களையும் புரோமோட் பண்ணுவார், அவருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ கார்த்தி அழைத்து தான் இங்கே வந்தேன், சிறந்த மனிதர், அனைத்து படங்களும் ஓட வேண்டும் என்று நினைப்பவர். இங்கே வந்தது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “விசாரணை கைதி பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகமாக மகேந்திரன் தான் சந்தோஷப்பட்டார். படத்தின் ஹீரோ உன்னி கிருஷ்ணன், டூயட் , ஆக்‌ஷன் பண்ணதை விட அவரது தாடி தான் எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு ஹீரோவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும், அதுபோல் உன்னியிடம் தாடி ஒரு ஸ்டைல். படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு வாழ்த்துகள். அவரை பார்க்கும் போதே தெரிகிறது கல்லம் கபடம் இல்லாதவர் என்று. இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். அமைதியாக இருக்கிறார் அதிலே தெரிகிறது, அவரது படம் பேசும் என்று. நாயகி ரித்விக்கா ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகள். வில்லனாக நடித்தவருக்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராஜன் சார் உங்களுக்காக, வீரமான மனிதர். அவருக்கு என்ன கஷ்ட்டம். அவரது மகன் வதந்திகளை கிளப்பாதீங்க என்று சொன்னார். இந்த ஒவ்வொரு மேடையிலும் தயாரிப்பாளர்களுக்கு நீங்க தான் குரல் கொடுப்பீங்க. அவர் அனைவரையும் திட்டுவார் என்று சொல்வார்கள். அது திட்டுவது அல்ல ஆசிரியர் இடத்தில் இருந்து அறிவுரை சொல்வார். சிறிய தயாரிப்பாளர்களை யாரும் ஏமாற்றி விட கூடாது என்று குரல் கொடுப்பார். 85 வயதில் நான் இருப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவர் அந்த வயதிலும் கம்பீரமாக இருப்பார். வெள்ளை சட்டை அவரது அடையாளம், அவரது உடலும் வெள்ளை. உங்களுக்கு அப்படி என்ன சார் பிரச்சனை. உங்களது வலதுகரமாக பேரரசு சார், உதயகுமார் சார் இருந்தார்கள், அவர்களிடமாவது சொல்லி இருக்கலாம். வயது ஆக ஆக அவர்களது மனநிலை எப்படி மாறும் என்பது எனக்கு தெரியும். காசு பணம் இருந்தாலும், உடன் யாரும் இல்லை என்றால் அவர்களது நிலை என்னவாகும் என்று தெரியும். இன்று விஜய் சார் சிஎம் ஆகியிருக்கிறார். அவரது அம்மா, அப்பா ஆகியோரை விட கே.ராஜன் சார் தான் அவர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர்களின் வலியை உணர்ந்து அடிக்கடி சொல்வார், என்னுடைய தயாரிப்பாளர்களின் நிலை மாற, மாற்று அரசியல் வந்திருக்கிறது. அதை பார்ப்பதற்குள் இப்படி அவசப்பட்டுடீங்களே. அவரால் தான் நான் பிரபலமானேன், பல இடங்களில் எனக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் நான் வாலை சுருட்டிக் கொண்டு, நேர்மையாக பயணித்து வருகிறேன்.

ரவி மோகன் சாரின் கதறலை பார்த்தேன். எல்லோருடைய குடும்பத்திலும் பிரச்சனை இருக்கும், யார் குடும்பத்தில் தான் பிரச்சனை இல்லை. இதேபோல் பிரஷாந்த் சார், ரஜினிக்குப் பிறகு அவர் தான். ஆனால், குடும்ப பிரச்சனையால் அவர் அந்த இடத்தை கைவிட்டுவிட்டார். எனவே ரவி மோகன் சார், பெரியவர்கள் மூலம் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இப்போது எந்த வீடியோவை பார்த்தாலும் டாஸ்மாக் பற்றி தான் வருகிறது. பத்து ரூபாய் அதிகமாக கேட்டு விட்டால், எங்கள் விஜய் அண்ணா வாங்க கூடாதுனு சொல்றாரு, நீங்க ஏன் வாங்குறீங்க என்று கேட்டு வீடியோ எடுக்கிறார்கள். அதற்காகவே பலர் டாஸ்மாக் சென்று வீடியோ எடுத்து போடுகிறார்கள். குழந்தைகள் அந்த வீடியோவை பார்த்தால் என்னவாகும். சுய ஒழுக்கம் வேண்டாமா. முன்பு திமுக மீது குற்றம் சொன்னீர்கள், இப்போது யார் மீது சொல்வீர்கள். மது குடிப்பது கெட்டப் பழக்கம் என்று தெரிந்தும், அதை ஏன் செய்கிறீர்கள். தயவு செய்து டாஸ்மாக் பற்றி வீடியோ போடுவதை நிறுத்துங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம், நன்றி.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “விசாரணை கைதி நல்ல தலைப்பு. இத்தனை நாட்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. விசாரணை, கைதி என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த ‘விசாரணை கைதி’ படமும் பெரிய வெற்றி பெறும்.

சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் நல்ல மனசுக்காரர். சினிமாவை மட்டும் அல்ல சினிமாக்காரர்களையும் அதிகம் நேசிக்க கூடியவர். பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் இறப்பில் அவர் எந்த அளவுக்கு சினிமாவையும், சினிமாக்காரர்களையும் நேசிக்கிறார் என்பதை நான் உடன் இருந்து பார்த்தேன். அந்த இறப்பில், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என அனவைருக்கும் தனி ஒருவராக தண்ணீர், டீ, காபி, உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்து கடைசி வரை அங்கே இருந்தார். அவருக்கு என் நன்றி. மாஸ்டர் மகேந்திரன் என்று சிறு வயதில் அழைத்தார்கள், வளர்ந்த பிறகும் அப்படி அழைக்க கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. மாஸ்டர் படத்தில் பின்னிட்டார். வெற்றியடைவது மட்டும் வெற்றி அல்ல, வெற்றிக்காக தொடர்ந்து போராடுவது தான் வெற்றி. அதற்காக தனி தைரியம் வேண்டும். அந்த தைரியத்துடன் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் மகேந்திரன் நிச்சயம் பெரிய இடத்துக்கு செல்வார். நடிகர் உன்னி கிருஷ்ணன், அடுத்த போராளி. அவரும் எதாவது ஒரு படத்தில் நடித்து, எதாவது பெயர் வாங்கிட மாட்டோமா என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில், தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பார். எந்த படமாக இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பார். அசால்டு மதுரா மதுரா என்றாலே அசால்டு தான். நீங்க அசால்டா ஜெயிச்சிடுவீங்க. 2026 சொன்னீங்களே உங்களுக்கும் நிச்சயம் கைகொடுக்கும். கவிஞர்கள் கலைக்குமார், சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள். படத்தின் தயாரிப்பாளரை பார்க்கும் போது தயாரிப்பாளர் போலவே தெரியல, வாய்ப்பு கேட்டு வந்தவர் போல இருக்கிறார். நான் இப்போது மதிப்பது பெரிய தயாரிப்பாளர்களை அல்ல சிறிய தயாரிப்பாளர்களை தான். காரணம், பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய கலைஞர்களை தான் போடுகிறார்கள். ஆனால், இவரைப்போன்று சிறிய தயாரிப்பாளர்கள் தான் வளரும் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இவர்களை போன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இபோதைக்கு இவர்கள் தான் பெரிய தயாரிப்பாளர்கள். இருப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களை விட, இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள் தான் மனிதர்கள். இயக்குநர் மணிகண்டன் இந்த படத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக இருக்கிறார். நானும் அவரைப் போல் தான் இருப்பேன், என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவர் தேர்வு செய்த தலைப்பே சிறப்பாக இருக்கிறது. படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் பி.ஆர்.ஓ கார்த்திகிற்கு நன்றி. தொகுப்பாளினி, கதாநாயகி காயத்ரிக்கு நன்றி.

பிரசாத் லேப், இந்த மேடையில் அதிக நேரங்கள் நாங்கள் செலவிட்ட மேடை. அதிகம் நேரம் நான், இன்னும் பலர் ஒருவருடன் நேரம் செலவிட்டோம். பல தருணங்களில் ஒன்றாக பயணித்தோம். எங்க ஹீரோ தயாரிப்பாளர் கே.ராஜன் என்ற இரும்புக்கரங்கள் பல இசைத்தகடுகளை வெளியிட்டு இருக்கிறோம். இப்போ கூட நம்ப முடியவில்லை. யாரோ ஒருவர் என்று சொன்னால் நம்பி விடுவோம். பல வருடங்களுக்கு முன்பு ஜி.வெங்கடேசன் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் தெரிந்தது, அனுதாபம் பட்டோம். கே.ராஜன் சார், தைரியத்தின் அடையாளம், துணிச்சலின் அடையாளம். அவர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி சினிமா மீது அக்கறை உள்ள மனிதர். அவருக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது. 85 வயது, இன்னும் 5 வருடங்கள் கடந்தால் இயற்கையே அழைத்துச் சென்றிருக்கோம். 85 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை. அந்த மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கோம். திருட்டு விசிடியை ஒழிக்க தனி நபராக அடித்து நொறுக்கினீங்களே அந்த கே.ராஜன் சார் எங்கே சார். சினிமாவை காப்பாற்ற குரல் கொடுத்தீங்களே, இப்படி ஆற்றில் விழுந்துட்டீங்களே. தைரியமானவர்களாக இருப்பவர்களுக்கும் இப்படி ஒரு நிலை என்றால், அங்கேயும் விதி விளையாடுகிறது. அவர் என்னிடம் பல முறை சொன்னது, பலருக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்து இருக்கிறேன், அதை திரும்ப வாங்க முடியவில்லை என்பது தான். கடன் வாங்கியவர்களிடம் கேட்டால் தருவதில்லை, என்று வருத்தத்தோடு சொல்வார். ஆனால், இது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்குமா என்றால் அது எனக்கு தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

புதிய தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதியவர்கள் தொடர்ந்து படம் தயாரித்தால் தான் திரைப்படத்துறை வாழும். எனவே, சினிமாவை பற்றி தெரியாமல் படம் தயாரிக்க வருபவர்கள், அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களிடமோ அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அறிவுரை பெற்று படம் தயாரிப்பது நல்லது. விசாரணை கைதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

இறுதியாக இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து பேசுகையில், “பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றி. பேரரசு சார், தமிழ்ச்செல்வன் சார், மகேந்திரன் சார், கூல் சுரேஷ் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சாருக்கு நன்றி, காலம் முழுவதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். நாயகன் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.

Related posts

Leave a Comment