கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமானவர் வ.கௌதமன். மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்திருப்பவர். இவர் சின்னத்திரையில் இயக்கிய ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, காயிதம் ஆகிய தொடர்கள் மாபெரும் கவனம் ஈர்த்த படைப்புகள். வ.கௌதமன்-மல்லிகா தம்பதியர்களின் மகள் கௌ.பரஞ்சோதி பி.காம்.,எம்பிஏ., அவர்களுக்கும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு தொழிலதிபர் க.கண்ணன்-சம்பாவதி தம்பதியர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க்., அவர்களுக்கும் வருகின்ற 24.06.2026 புதன் மாலை வரவேற்பு நிகழ்வும் மறுநாள் 25 ஆம் தேதி காலை 7.35 முதல் 9 மணிக்குள் புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணமும் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் இன்றைய அரசியலின் ஆகப்பெறும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் நீதி அரசர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள், கல்வியாளர்கள், திரை துறை ஆளுமைகள் மற்றும் தொழிலதிபர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
க.குணாநிதி கெள.பரஞ்ஜோதி திருமணத்திற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்தான் தற்பொழுது ஆகப்பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. நவீன உலகத்தில் மணமக்களின் பெயர்களை மட்டுமே தாங்கி பல வடிவங்களில் திருமண அழைப்பிதழ் வெளிவரும் சூழலில் கௌதமன் தனது உறவினர்கள் அனைவரது பெயர்களும் ஒருவர் விடாமல் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பாக கௌதமனின் பாட்டன் பூட்டன் காலம் முதல் இப்போதைய அவரது மகன் தமிழ் கௌதமன் மகள் பரஞ்சோதி மருமகன் குணாநிதி வரை ஆறு தலைமுறையினர் பெயர்களையும் பட்டியலிட்டு முடிந்தவரை அவர்களது புகைப்படங்களையும் பதியமிட்டு “ஆறு தலைமுறை வரைபடம்” என பேரழகோடு வடிவமைத்துள்ளார்.
இயக்குனர் வ.கௌதமனின் தந்தை வடமலையின் முன்னோர் அரியலூர் மாவட்டம் ஆர் எஸ் மாத்தூர் “சோழன் குடிக்காடு” கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தெற்காசிய நாடுகள் முழுவதும் கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் தளபதிகளாக நின்று படை நடத்தி ஆட்சி புரிந்த பெருமைக்குரியவர்கள் இவர்களின் முன்னோர்கள்.
ஏறத்தாழ 1870 ஆம் ஆண்டு காலத்தில் சோழன் குடிக்காடு கிராமத்திலிருந்து, ஐயா சிதம்பரம் என்பவர் இன்றைய கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆ.பாளையம் என்கிற கிராமத்திற்கு இடம்பெயர்ந்திருக்கிறார். சிதம்பரம் அவரது மகன் அப்பாவு அவரது மகன் அரியமுத்து, அரியமுத்துவின் மகன் வடமலை, வடமலையின் மகன் கௌதமன், கௌதமனின் மகன் தமிழ் கௌதமன், மகள் பரஞ்சோதி, மருமகன் குணாநிதி என ஆறு தலைமுறைகளின் பெயர்களையும் பதிவு செய்திருப்பதுதான் சிலிர்ப்பையும் நெகிழ்வையும் ஏற்படுத்துவதாக அழைப்பிதழை பெற்ற அத்தனை ஆளுமைகளும் பாராட்டுவதோடு அது இப்போது அனைவராலும் பேசப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது.

