418 – விமர்சனம்

ஆரம்பகால கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் குழுவொன்று, ஒரு மாணவர் விடுதிக்கு குடிபெயர்கிறது. பதினைந்து ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், அதற்கு முன் ஒரு மனநலக் காப்பகமாக இருந்தது. விவேக் சங்கர் எனும் மாணவன், அவ்விடுதியில், சீல் வைக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான அறை எண் 418-க்கு அருகில் உள்ள 417 -க்குக் குடிபெயர்கிறான். அந்த ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் எவரும் நுழையக் கூடாது. அப்படி பெண்கள் யாரேனும் நுழைந்தால், 418 இலுள்ள அமானுஷ்ய சக்தி விழித்துக் கொள்ளும்.

ஏதோ அமானுஷ்யமாக உள்ளதே என உணரும் விவேக், அதைத் தெரிந்து கொள்ள 418 அறைக்குள் நுழையும் அதே சமயம், லண்டனில் இருந்து திரும்பிய கோவிட்டால் பாதிக்கப்பட்ட சாய்ஷா எனும் பெண் அந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைகிறார். அதனால் அசாதாரணமான பில்லி-சூனிய மர்ம சம்பவங்கள் தீவிரமடைந்து, ஊரடங்கு காலத்தில் மாணவர்களை அங்கேயே சிக்கும்படி ஆகிறது. அவ்விடுதியில் நடக்கும் அனைத்து மர்மங்களும், ஒரு சோகமான கடந்த காலத்தைக் கொண்ட தேவிகா என்ற உள்ளூர் யக்ஷகான பெண் கலைஞருடன் தொடர்புடையதாக இருக்கிறது. தேவிகாவிற்கு என்ன நிகழ்ந்தது, ஏன் பெண்கள் அந்த விடுதிக்குள் வரக்கூடாது, அப்படி மீறி வந்தால் என்னவெல்லாம் நிகழும் என்பதே படத்தின் முடிவு.

அமானுஷ்யத்தை எமோஷ்னலாகவும் சைக்காலஜிக்கலாகவும் அணுக இப்படம் முயற்சி செய்துள்ளது. ஒரு பெண்ணின் மன வலி, அவளுக்கு நிகழும் சமூக அநீதி, அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை ஹாரராக மாற்றியுள்ளனர். யக்ஷகான கலைஞர் தேவிவாக நடித்துள்ள சைத்ரா J. ஆச்சார் மிகவும் சிறப்பாக நடித்துள்ளர். திரையில், யக்ஷகான கலைஞராக அவர் செலுத்தியுள்ள மெனக்கெடல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சூர்யா ராஜ் வீரபத்தினி, சேரன் லக்காராஜு, ப்ரீத்தி, ஷஷாங் பாட்டில், ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

விடுதியையும், விடுதியின் காரிடாரையும் கூட மிகவும் அச்சுறுத்தும் கோணங்களில் காட்டி பயமுறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன். வெங்கி GG-இன் பின்னணி இசை, பயமுறுத்துவதில் விஷூவல்ஸை மிஞ்சித் தனி ஆவர்த்தனம் செய்துள்ளது. யக்ஷகானத்தை, ஹாரரோடு கலந்து அற்புதமாக ஒலி வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். மொத்தத்தில் 418 படத்தின் மூலம் ஒரு பேயாட்டம் ஆடியுள்ளார் இயக்குநர் கிர்தான் நாடகெளடா.

Related posts

Leave a Comment