மாநில கட்சி அந்தஸ்தை தேமுதிக, பாமக இழந்தது!

மக்களவை தேர்தலில் 8 சதவீதம் கூட வாக்குகளை பெற முடியாததால் தேமுதிக மற்றும் பாமகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தானது. தமிழ் திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். மக்கள் செல்வாக்கை பெற்ற அவர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கும்போதே, “நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி அமைப்பேன்” என்று விஜயகாந்த் கூறினார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

புதிய கட்சி தொடங்கியதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்து போட்டியிட்டது. அதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆனால் 10.3 சதவீதம் ஓட்டு வாங்கி தமிழக கட்சி தலைவர்களை திரும்பி பார்க்க வைத்தது. தனித்து நின்றால் வெற்றிபெற முடியாத என்ற நிலையில், அடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டார். இதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றிபெற்று, தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் தேர்வானார். ஆனால், அதிமுகவுக்கு ஆதரவாக இல்லாமல், ஜெயலலிதாவை எதிர்த்தார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்த் கழற்றி விடப்பட்டார். பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 இடங்களில் தேமுதிக போட்டியிட்டது.  இதிலும் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அப்போது இவரது கட்சிக்கு 2.39 சதவீதம் வாக்குகளே கிடைத்தது.

தொடர்ந்து அவர் தமிழகத்தில் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவை விஜயகாந்த் எதிர்த்து வந்ததை, தேமுதிக தொண்டர்களே ஏற்கவில்லை. ஆனால், அவரது மனைவி பிரேமலதா தேமுதிக கட்சியில் அதிகளவில் தலையிட்டார். பிரேமலதாவின் தம்பி சுதீஷும் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். பிரேமலதா அனுமதி இல்லாமல் விஜயகாந்தை தேமுதிக நிர்வாகிகள் கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. அடுத்து 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பெரிய அளவில் வெற்றிபெற முடியும் என்று தேமுதிக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், விஜயகாந்தின் முதல்வர் கனவு, அக்கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் அவருடன் கூட்டணி சேர்ந்தனர். வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போது தேமுதிக மட்டும் 104 இடங்களில் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த தேர்தலில் தேமுதிக 2.39 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியது. அப்போதும் பிரேமலதா தான் விஜயகாந்த் பின்னால் இருந்து செயல்பட்டு, தவறான கூட்டணியை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில்தான் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தேமுதிக கட்சி பிரேமலதாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொண்டர்களை சந்திக்க முடியாத நிலைக்கு விஜயகாந்த் உடல்நலம் இருந்தது. அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனாலும், அவரால் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவோ, பேசவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான் தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பிரேமலதா விதித்த நிபந்தனையால் கூட்டணி ஏற்படவில்லை. அதன்பிறகு பல்வேறு இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி ஏற்பட்டது. அப்போது, பேட்டி அளித்த பிரேமலதா பத்திரிகையாளர்களை மரியாதை இல்லாமல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டது. இந்த 4 இடங்களிலும் தற்போது தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. பிரேமலதா தம்பி சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சுதீஷ் மட்டும் விஜயகாந்த் கட்சி தொடங்கியதில் இருந்து 5 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக 2.19 சதவீதம் வாக்குகளே வாங்கியுள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில கட்சி அங்கீகாரத்துடன் செயல்பட்ட தேமுதிக, அந்த அங்கீகாரத்தையும் இழந்து விட்டது. ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் பதிவாகும் மொத்த வாக்கில் 8 சதவீதம் பெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. தற்போது தேமுதிக கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது. அதுவும் ஒரு எம்பி, ஒரு எம்எல்ஏ சீட்டுகளில் கூட வெற்றிபெற முடியாத பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2016ம் ஆண்டு எடுத்த தவறான முடிவு, இதற்கு காரணமாக இருந்த பிரேமலதா மற்றும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரேமலதாவின் ஆணவப்போக்கால் தற்போது தமிழகத்தில் தேமுதிக கட்சியின் கூடாரமே காலியாகும் நிலைக்கு வந்துள்ளது. விஜயகாந்தின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் தற்போது தேமுதிகவில் இருந்து விலகி, மாற்றுக்கட்சிக்கு சென்றுள்ளதே தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது. இனி, தமிழகத்தில் தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என்ற ஒரு பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.

பாமக: தமிழகத்தில் பாமக ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றிபெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாசுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் நீடித்தார். அதன்பின் திராவிட கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்தது. அதன்படி கடந்த சில தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அன்புமணி உள்ளிட்ட 7 பேரும் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே மாநில அங்கீகாரத்தை இழந்த பாமக, இந்த தேர்தலில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுவிடலாம் என நினைத்தனர். இதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால், 5.42 சதவீத அளவே வாக்கு வாங்கியதால் பாமகவும் மீண்டும் அங்கீகாரம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

* மக்களவை தேர்தலில் அதிமுக மொத்தம் 78,30,520 ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால் திமுக 1,38,77,622 ஓட்டுகள் பெற்றுள்ளது.

* அதிமுகவை விட திமுக மட்டும் 60,47,102 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.

* அதிமுக கூட்டணியில் அதிமுக 18.48, பா.ஜ 3.66, தேமுதிக 2.19, பாமக 5.42 சதவீத வாக்குகளை பெற்றது.

* பாமக 7 தொகுதிகளிலும் 22,97,431 ஓட்டுகளும், தேமுதிக 9,29,590 ஓட்டுகளும் பெற்றது.

Related posts

Leave a Comment