அதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் வரிந்துகட்டிக் கொண்டு போட்டியில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜ, பாமக கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கேட்பதாலும், ஜாதிக்கு ஒரு சீட் வேண்டும் என்று முன்னோடிகள் கேட்பதாலும், அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.
இதனால், அதிமுக கட்சியில் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே கடுமையான கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கான 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் வருகிற ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்க உள்ளது.