மூன்றரை ஆண்டுகளில் 17 லட்சம் பேர் மீது ஹெல்மெட் போடாத வழக்குகள் பதிவு!

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியதாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 17.12 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் 46 லட்சம் இருசக்கர வாகனங்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் வாகனப் பெருக்கம் 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நாட்டிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் தில்லி முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாமிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளன.சென்னையில் இப்போது இருவருக்கு ஒன்று என்ற விகிதத்தில் இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை உயருவதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வாகனப் பெருக்கத்துக்கு ஏற்றாற்போல சாலை வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. நகரத்தை விட்டு வெளியே விரைவுச் சாலைகள், புறவழிச்சாலைகள் அதிகரித்தாலும், நகருக்குள் 60 ஆண்டுகளாக எந்தவொரு சாலையும் புதிதாக உருவாக்கப்படவும் படவில்லை, பழைய சாலைகள் விரிவாக்கப்படவும் படவில்லை.

இதன் விளைவாக, சென்னையில் வாகன நெரிசல், போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. ஆனால் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கடந்த இரு ஆண்டுகளாக எடுத்து வரும் கடும் நடவடிக்கையின் காரணமாக, விபத்துகளும், இறப்புகளும் குறைந்து வருகின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த 7,794 சாலை விபத்துக்களில் 1,297 பேர் உயிரிழந்தனர், 6243 பேர் காயமடைந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டு 15 உயிரிழப்புகள் குறைந்தன. இதில் இரு சக்கர வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகின்றன. இத்தகைய விபத்துகளில் 20 வயதில் இருந்து 30 வயது வரையுள்ள இளைஞர்களே 72 சதவீதம் இறப்பதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

17.12 லட்சம் வழக்குகள்

இதன் காரணமாக, போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவதில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சாலை விபத்துகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனங்களில் அதிக சுமை ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுவது ஆகிய 8 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அதிக கவனம் செலுத்தி, வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
முக்கியமாக கடந்த இரு ஆண்டுகளாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது சமரசமின்றி வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு மே மாதம் வரை இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்ட 17லட்சத்து 12,506 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு சராசரியாக 4,691 வழக்குகள் பதியப்படுவதாக போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக சென்னை முழுவதும் தினமும் 100 முதல் இருந்து 150 இடங்கள் வரை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள 237 அதிகாரிகள் வாகனச் சோதனை செய்து, வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

குற்ற உணர்வு இல்லை

தலைக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதை வாகன ஓட்டிகள் எந்த சிரமமின்றி செலுத்துகின்றனர். அவர்களிடம் போக்குவரத்து விதியை மீறிவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதில்லை. அபராதத் தொகையை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் உள்ளது. நாங்கள் இப்போது, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும், வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் என்றார் சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்துப் பிரவு கூடுதல் ஆணையர் ஏ.அருண்.

தலைக்கவசமும்… வழக்குகளும்…

சென்னையில் மூன்றரை ஆணடுகளில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை ஆண்டு வாரியாக
ஆண்டுகள் வழக்குகள்
2016 3,91,139
2017 3,41,332
2018 5,79,592
2019 4,00,443
(மே வரை)
மொத்தம் 17,12,506

Related posts

Leave a Comment