உலகக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் இதுவரை வென்றதே இல்லை என்பதால் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றின் 22ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 16) பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஷிகர் தவனுக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுக்கு பக்கபலமாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது வேகமான அரைசதத்தை நேற்று பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில் 57 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் தந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. 113 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்து ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். விராட் கோலி 77 ரன்களில் வெளியேறினார். பின்வரிசை வீரர்கள் ரன் குவிக்கத் தடுமாறியதால் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாகப் பந்துவீச அழைக்கப்பட்ட விஜய் ஷங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் ஹக்கை அவுட் ஆக்கி சாதனை படைத்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஃபக்கர் ஜமான் – பாபர் அசாம் ஜோடி மேற்படி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு, அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரன் வேகத்தை உயர்த்தினர்.

24ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், பாபர் அசாமை 48 ரன்களுக்கு வெளியேற்றியதோடு, 26ஆவது ஓவரில் ஃபக்கர் ஜமானையும் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார். அனுபவ வீரர்களான முகமது ஹபீசையும், சோயப் மாலிக்கையும் அடுத்தடுத்த பந்துகளில் ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்த ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related posts

Leave a Comment

fifteen − 1 =