மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 38 உறுப்பினர்களும் தாய்மொழியான தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது..
17-ஆவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் எம்பிக்கள் உள்ளிட்டோர் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் பதவியேற்றதால், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் 37 பேரும், அதிமுக உறுப்பினர் ஒருவரும் பதவியேற்றனர். இவர்களுக்கு மக்களவை இடைக்காலத் தலைவர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடக்கத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கே.ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். அப்போது, இறுதியில் அவர் காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறினார். அதைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஜி.செல்வம், எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி உள்ளிட்ட அனைத்து திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், ஏ.செல்லக்குமார் உள்ளிட்ட உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் என மொத்தம் 38 உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
திமுக உறுப்பினர் கனிமொழி பதவியேற்ற போது முடிவில், வாழ்க தமிழ், வாழ்க பெரியார் எனவும், தயாநிதி மாறன் பதவியேற்ற போது, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க எனவும் கூறினர்.
கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ஜோதிமணி பதவியேற்ற போது வாழ்க தமிழ், வளர்க தாயகம் எனக் கூறினார்.
பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் பதவியேற்ற போது தமிழகம் வாழ்க, இந்தியாவும் வாழ்க எனக் கூறி முடித்தார். சிதம்பரம் தொகுதி உறுப்பினர் தொல்.திருமாவளன், வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வெல்க சமத்துவம், ஜனநாயகம் எனக் கூறினார்.
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.சுப்பராயன் தனது உறுதிமொழியின் முடிவில், மதச்சார்பின்மையும், இந்தியாவும் நெடுங்காலம் வாழ்க என கூறினார். கோவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றார். இதேபோல, தருமபுரி தொகுதி திமுக உறுப்பினர் எஸ். செந்தில்குமார் கருப்புச் சட்டை அணிந்து பதவியேற்க வந்திருந்தார். அவர் பதவிப் பிரமாணத்தின் முடிவில், திராவிடம் வெல்க எனக் கூறினார்.
விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் வெல்க தமிழ், வாழ்க அம்பேத்கர் என கூறி பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்.
திமுக எம்.பி.க்கள் எஸ். ஆர். பார்த்திபன், கவுதம் சிகாமணி ஆகியோர், வாழ்க தளபதி, வாழ்க கருணாநிதி என முழக்கமிட்டனர். தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி. ரவீந்திரநாத் குமார் பதவிப் பிரமாணத்தின் முடிவில், வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறினார்.
அப்போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரியார், கருணாநிதி போன்றோர் பெயர்களைக் கூறியதற்கு ஆளும் கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. அப்போது, பதவிப் பிரமாணம் தொடர்புடைய குறிப்பு மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என மக்களவையின் இடைக்காலத் தலைவர் வீரேந்திர குமார் உத்தரவிட்டார்.
எம்.பி.க்கள் கோஷமிட்டதால் பரபரப்பு
மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை புதிய உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவிப் பிரமாணத்தை முடிக்கும் தருவாயில் கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இதைத் தவிர்க்குமாறு மக்களவையின் இடைக்காலத் தலைவர் வீரேந்திரகுமார் அறிவுறுத்தியும், சில உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவையில் பரபரப்பு காணப்பட்டது.
மக்களவையில் உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட பாஜக எம்பிக்கள் பலரும் தங்களது பதவிக்கான உறுதிமொழி ஏற்பின் போது பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். சில உறுப்பினர்கள் வந்தே மாதரம் என கோஷம் எழுப்பினர். இதற்கு சமாஜவாதி கட்சியின் உறுப்பினர் ஷபிகுர் ரகுமான் பர்க் ஆட்சேபம் தெரிவித்தார். அவருக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் மன்னிப்புத் தெரிவிக்குமாறு கோரினர். இதையடுத்து, வீரேந்திரகுமார் இதுபோன்று கோஷங்களை எழுப்ப வேண்டாம் என உறுப்பினர்களிடம் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால், அது பலன் தரவில்லை. பாஜக உறுப்பினர் அஜய் குமார், பாரத் மாதா கீ ஜே எனும் கோஷம் எழுப்பியதும், மீண்டும் ஒருமுறை அதைத் திருப்பிக் கூறுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டார்.
அதற்கு ஜெய் என்று ராகுல் காந்தி கூறி முடித்தால், தாம் அந்த கோஷத்தை மீண்டும் கூறுவதாக அஜய் தெரிவித்தார். இதையடுத்து, ஜெய் ஹிந்த் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவருடன் பிற காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்த குரலில் ஜெய் ஹிந்த் எனக் கூறினர்.
ஹைதராபாத் தொகுதியைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சி உறுப்பினர் அஸாதுதீன் ஒவைசி பதவிப் பிரமாணம் ஏற்க வந்த போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தரப்பில் இருந்து ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் எனும் கோஷங்களை முழக்கமிட்டவாறு இருந்தனர். இதற்கிடையே, பதவிப் பிரமாணம் எடுத்து முடிக்கும் தருவாயில் ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹூ அக்பர், ஜெய்ஹிந்த் என அஸாதுதீன் ஒவைசி கூறினர்.
மதுரா தொகுதி பாஜக உறுப்பினர் ஹேமமாலினி தனது பதவிப் பிரணமானத்தை முடிக்கும் போது ரஹே, ரத்யே என்று கிருஷ்ணர் புகழ் பாடும் ஒரு ஸ்லோகத்தில் உள்ள வரியைச் குறிப்பிட்டார்.