காங்கிரஸைக் கழட்டி விட்டு விட்டு தனித்து போட்டி! – திமுக வில் கோஷம்!

காங்கிரஸூக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது.. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு  பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

தமிழ் நாட்டில் தற்போது  நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும் வெற்றிபெற்றுவிட்டனர்.

ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜ், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இருந்த உறவைக் கெடுத்ததே அவர்கள் இருவர்தான். சட்டமன்றத்தில் செல்லகுமார் தலைவர் எதிரிலேயே பேசினார். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அதே செல்லகுமாருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் வேலைசெய்து வெற்றிபெற வைத்தோம்” என்றார்.

தொடர்ந்து, “தென்சென்னையில் உள்ள 200 வட்டத்தில் காங்கிரஸுக்கு 35 வட்டங்களை பெற்றே தீருவோம் என்று ஒருவர் கூறியுள்ளார். நான் தலைவரிடம் வலியுறுத்துவது, மக்களுக்கு நாம் பயன்பட வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் நன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? ஆனால் இது என்னுடைய கருத்து. தலைவர் எடுக்கும் முடிவினை நான் ஏற்றுக்கொள்வேன். திருச்சியைப் பொருத்தவரை தனித்துப் போட்டியிட வேண்டுமென்றுதான் தலைவரிடம் வலியுறுத்துவேன்” என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதே திருச்சி வேட்பாளர் திருநாவுக்கரசருக்கும், கே.என்.நேருவுக்கும் இடையே சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டன. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ஓட்டுக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் வெற்றிபெற்றேன் என்றும், அதிமுகவினர் வாக்குகளால் வெற்றிபெற்றேன் என்றும் திருநாவுக்கரசர் கூறியதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று சத்திய மூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கராத்தே தியாகராஜன், “கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க முன் வந்தது. அதனால், திமுகவிடமிருந்து இருந்து அதிக இடங்களைப் பெற வேண்டும் அல்லது, தனித்துப் போட்டியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

200 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடியாவிட்டாலும் தென்சென்னை பகுதியில் உள்ள 35 வார்டுகளில் தனித்துப் போட்டியிட வேண்டும். போட்டியிடும் வார்டுகளில் காங்கிரஸை வெற்றிபெற வைப்பேன்” என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கே.என்.நேரு இவ்வாறு கூறியிருக்கிறார் என்கிறார்கள்

Related posts

Leave a Comment

six − one =