சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயார் – டி டி வி தினகரன்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி சுப்பையா, அதிமுகவுடன் இணைந்தார். இதனால், கட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு 50 அடி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. சிறந்த கூட்டணி அமைத்து போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டுவோம். அமமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு என்பது எங்களுக்கு ஓர் அனுபவம். ஒரு சிலர் கட்சியைவிட்டு வெளியே சென்றாலும், அனுபவம் வாய்ந்த நிர்வாகி களும், உண்மையான தொண்டர்களும் எங்களிடம் இருக்கின்றனர். அமமுகவுக்கு விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கும். சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன்தான் இருப்பார்.

நடிகர் ரஜினியின் கட்சி கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து. வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட உள்ளேன். ஒன்று ஆர்.கே.நகர் மற்றொன்று இன்னும் முடிவாகவில்லை. மதரீதியாக மக்களிடம் ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பத்தைப் போக்க குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒஎன்ஜிசி திட்டங்களுக்கு தடை விதிக்காமல், பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயலாகும். கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமமுக பொருளாளர் பி.வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அலுவலக திறப்புவிழாவில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால், ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

Leave a Comment