இ.பி.கோ. 306. சினிமா விமர்சனம்

‘நீட்’ தேர்வும், அதன் அழுத்தத்தால் அனிதாவில் தொடங்கி அடுத்தடுத்து நேர்கிற மாணவ, மாணவிகளின் தற்கொலைகளும் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், ‘நீட்’ தேர்வு சார்ந்த விழிப்புணர்வை விதைக்கும் விதத்தில் வந்திருக்கிறது இந்த இ.பி.கோ. 306.’

இந்த படத்தை எம்.எக்ஸ். பிளேயர் OTT-யில் இலவசமாகவே பார்க்க முடிகிறது.

மருத்துவப் படிப்புக்கான கட்டாய நுழைவுத் தேர்வான ‘நீட்’ குறித்து விரிவாக அலசியிருக்கிற இந்த படத்தை நிஜ டாக்டரான சாய் என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தை தயாரித்திருக்கிற சாய் பிக்சர்ஸ்’ சிவக்குமார் கல்வியாளராம்.

திருச்சியில் இருக்கிற ஒரு கிராமத்தில், பின்னாளில் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு படித்து, 12-ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறாள் அந்த மாணவி.

12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாலும் அந்த மாணவியால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறாள். வழக்கின் தீர்ப்பு மாணவிக்கு எதிராக வருகிறது. அந்த தீர்ப்பை லோக்கல் அரசியல்வாதி அரசியலாக்கி அட்டகாசம் செய்கிறார். அதையெல்லாம் அந்த மாணவி எப்படி சந்திக்கிறாள் என்பதை விவரிப்பதே அடுத்தடுத்த காட்சிகள்! மாணவிக்கு நியாயம் கிடைத்ததா இல்லையா என்ற கேள்விக்கு பதிலாய் கிளைமாக்ஸ்!

மருத்துவக் கனவைச் சுமந்த மாணவியாக வருகிற தாரா பழனிவேல் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். இயல்பான நடிப்பால் தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்க்கிறார்.

(கடந்த வருடத்தில் காலமான) சீனு மோகன் தாரா பழனிவேலின் அப்பாவாக வருகிறார். நெகிழ வைக்கும் நடிப்பைத் தருகிறார்.

படத்தை இயக்கிய டாக்டர் சாய் அரசியல்வாதி வேடத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். அவசியமான நேரத்தில் ஆக்கபூர்வமான படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறப்பு பாராட்டு!

மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறது.

இசை சூரிய பிரசாத். மனதைக் கரைக்கும் ஒரு பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணா பாடியிருக்கிறார். ‘சூப்பர் சிங்கர்’ நித்ய ஸ்ரீயும் பாடியிருக்கிறார். அவரது குரல் இனிமை!

சபாஷ்ப்பா என்று சொல்லும்படியிருக்கிறது செல்லப்பாவின் ஒளிப்பதிவு.

பெற்றோர், மாணவ, மாணவிகள் தவறாது பார்க்க வேண்டிய இந்த படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவிப்பது குறிப்பிடத்தக்க செய்தி!

Related posts

Leave a Comment