வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெற்குவீதியில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று (மார்ச் 15) திருவாரூரில் இருந்து தொடங்கினார். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு சென்னையில் இருந்து திருவாரூருக்குப் புறப்பட்டார் ஸ்டாலின்.

திருவாரூரின் தெற்கு வீதிக்கு மிகப்பெரிய அரசியல் பாரம்பரியம் உள்ளது. மூத்த கம்யூனிஸ்டு தலைவர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஈ.கே.நாயனார், எஸ்.ஏ.டாங்கே, ஏ.பி.பரதன் ஆகியோர் திருவாரூரில் மேடை அமைத்தபோது இங்குதான் பேசியிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி, தானே ஜீப் ஓட்டிக்கொண்டு சோனியாவுடன் இந்தத் தெற்கு ரத வீதியில் வந்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என பல தலைவர்கள் திருவாரூர் தெற்கு ரத வீதியில் பேசியிருந்தாலும்…

கலைஞர் திருவாரூரில் பேசுகிறார் என்றால் அவருக்கும் உற்சாகம் திருவாரூருக்கும் உற்சாகம். பலமுறை இந்த திருவாரூர் தெற்கு வீதியில் பேசியுள்ளார் கலைஞர். கடைசியாக 2016ஆம் ஆண்டு மொழிப்போர் வீர வணக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் தெற்கு வீதியில் இருந்துதான் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

”நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோதும், இந்த திருவாரூரில் இருந்து என்னுடைய பரப்புரையைத் தொடங்கினேன். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கும், முதன்முதலாக இந்த திருவாரூரிலிருந்து தான் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறேன். எவ்வாறு, இந்தியாவின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இன்றைக்கு மூன்றாவது இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

கடந்த 10 ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டைப் பாழடித்து விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 5 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்தார். ஊழல் வழக்கின் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு, அவரது பதவியை இழந்தார். இடையில் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். எனவே வழக்கு பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த காரணத்தால் ஆட்சியை ஒழுங்காக நடத்தவில்லை. அதற்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டுக் காலத்திற்குள் அவர் உடல் நலிவுற்று அவர் மறைந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர் மறைந்த பிறகு நான்கு ஆண்டுக்காலமாக – இடையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார் – அதனைத் தொடர்ந்து பழனிசாமி ஆட்சிப் பொறுப்பை ஏற்று எந்த அளவுக்குச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும்.

இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் – பொய்களையே செய்திகளாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும் மு.க.ஸ்டாலினும்தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுக்காலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின்தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா… இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் – தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணமென்றால் வழக்கு போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்… நீங்கள் தயாரா? நான் ரெடி… பழனிசாமி நீங்க ரெடியா?” என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

தொடர்ந்தவர், “ஸ்டாலினை நேரடியாக விவாதிக்க வா வா என்று அடிக்கடி அழைத்து கொண்டிருக்கிறாரே… அவ்வாறு அழைத்துக்கொண்டிருக்கும் பழனிசாமி ‘என் மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. அதை துடைக்கிறேன். அதை நிரூபிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் தன் மீதான ஊழல் வழக்கை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் பயந்து – அஞ்சி – நடுங்கி இன்றைக்கு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கி இருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு முதலமைச்சராக பழனிசாமி அவர்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார். சிபிஐ விசாரணை நடக்க தொடங்கியிருந்தால், அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ராஜினாமா செய்வது மட்டுமல்ல, சிறைக்குள் இருந்து இருக்க வேண்டும். அதுதான் உண்மையான நிலை. எனவே நீங்கள் முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் தப்பித்துக் கொண்டிருக்கலாமே தவிர, ஸ்டாலின் முதலமைச்சராக ஆனதற்கு பிறகு நீங்கள் தப்பிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து தேர்தல் அறிக்கை தொடர்பாக பேசினார் ஸ்டாலின்.

“நேற்று அதிமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் சொன்னதையே நகலாக காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மகளிருக்கு உரிமத் தொகை ரூ.1000 என்று அறிவித்தோம். அதை ரூ.1500 என்று அறிவித்துள்ளார்கள். முதியோருக்கு உதவித் தொகை 1,500 என்று அறிவித்தோம். 2,000 என்று அறிவித்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கல்விக் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருந்தோம். அதையே இப்போது அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம். இது புதிதாகச் சொன்னதல்ல. விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்து புரட்சி செய்தவர்தான் நமது தலைவர் கலைஞர். எனவே அவர் வழிநின்று கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தேன். அவரும் அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் என்ன சொல்வார் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். அறிவாலயத்தில் ஸ்பை வைத்திருக்கிறார் போலும்!

முதலமைச்சராக நீங்கள் நான்கு வருடங்களாக இருந்து இருக்கிறீர்கள் அல்லவா? அப்போது ஏன் இதையெல்லாம் அறிவிக்கும் எண்ணம் வரவில்லை? அப்போது ஏன் சிந்திக்கவில்லை; அந்த உணர்வு வரவில்லை? விவசாயப் பெருங்குடி மக்கள், அவர்களது அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். உயர் நீதிமன்றம் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை கேட்ட பிறகாவது அதை செய்தார்களா? இல்லை. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார்கள். கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது – நிதி இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டு இப்போது அறிவிக்கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிந்து பின்னர் அணையுமே அதைப் போல கடைசி நேரத்தில் அறிவிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் அறிவிக்கிறார்கள். ஏனென்றால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம் அல்லவா?” என்றவர் திருவாரூருக்கு கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டு,

“வெற்றிவிழா நிகழ்ச்சியையும் மீண்டும் இதே இடத்தில் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நல்வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிரச்சாரத்தை முடித்தார் ஸ்டாலின்.

Related posts

Leave a Comment