நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குபதிவு

ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பண பட்டுவாடாவைத் தடுக்க உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். நத்தம் தொகுதிக்கு உட்பட்ட முளையூர் புன்னபட்டி, காட்டுவேலம்பட்டி பகுதிகளில் அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காட்டுவேலம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவரை வரவேற்கப் பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். அந்த ஆரத்தி தட்டுகளில் அதிமுக பிரமுகர் ஒருவர் சார்பில் பணம் போடப்பட்டது.

பின்னர், ஒரு வீட்டின் முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆரத்தி எடுக்கும் போது வேட்பாளரே பணத்தை கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதையடுத்து நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிடும், திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், அதிமுக வேட்பாளர் பணம் பட்டுவாடா செய்தது குறித்துத் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதோடு, அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்துக்கு வரும் போது, அவரை சுற்றி தேர்தல் விதிமுறைகளை மீறி நிறைய கார்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் சோதனையிடுவதில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது எனப் பிற கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்புக் குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் புகாரின் பேரில், வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171E பிரிவின் கீழ் நத்தம் போலீஸார் ஆர்.விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

Leave a Comment