தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த தேர்தல் அனைத்து தரப்பினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும், குறைவில்லாமல் இருக்கிறது இந்த தேர்தல் களம்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாதது குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அடிக்கல் நாட்டிய தோடு கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், ”அதிமுக அரசும் பாஜக அரசும் இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி ஒரு செங்கல்லைத் தூக்கிக் காட்டினார்.
பொதுமக்கள் மத்தியில் உதயநிதியின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. உதயநிதி செங்கல்லைக் காண்பித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கலக்கியது. இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினர்களாகத் தேனி எம்.பி. ரவீந்திரநாத், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் மார்ச் 26 அன்றுஎய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலிருந்த செங்கல்லைத் திருடியதாக உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான நீதி பாண்டியன் ஆன்லைன் மூலம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகப் பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 2020 டிசம்பர் 1ஆம் தேதி, மருத்துவமனையைக் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5 .5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவர் வளாகத்திற்குள் இருந்து திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிக்கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையைப் பிரச்சாரக் கூட்டத்தில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒப்புக் கொண்டது மட்டுமின்றி அந்த செங்கல்லைப் பொதுமக்களிடத்தில் எடுத்து காண்பித்துள்ளார். அவரது இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 370 இன் படி தண்டிக்கத்தக்கக் குற்றமாகும். எனவே இந்த புகார் மீது விசாரணை செய்து உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். மேலும், அந்த செங்கல்லை கைப்பற்றி சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்: என்று தெரிவித்துள்ளார்.
அந்த புகாரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடி போல இதுவும் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.