தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் திருப்பதி என்பவர் போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த மார்ச் 19ஆம் தேதி காரைப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆவியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இது பற்றி புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பரிசு பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும், அதை ஆராய்ந்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

Leave a Comment