பாட்டுபாடி வாக்கு கேட்கும் நாம் தமிழர் சீமான்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவர் பேசுவதற்கு முன்னர், அக்கட்சியின் பெண்கள் பிரிவினர் மேடையிலேயே சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்தனர்.

மைக்கைப் பிடித்த சீமான், நாம் தமிழரின் ஆட்சி அமைந்தால் என்னென்ன செய்வோம் என தமிழ்த் தேசியக் கொள்கைத் திட்டங்களைப் பற்றி விவரித்தார்.

அவரின் பேச்சிலிருந்து..!

” பாண்டியாறு புன்னம்புழா ஆறுகள் கேரளத்தின் ஆறு மாவட்டங்களை செழிக்கச்செய்கிறது. அதில் அணை கட்ட இந்திராகாந்தி அடிக்கல் நாட்டிவிட்டுப் போய்விட்டார். நாம் அந்த அணையைக் கட்டுவோம். பசியைப் போக்கணும்னு இலவச அரிசி தருது அரசாங்கம். உலக வர்த்தக அமைப்பு உணவு மானியத்தை துண்டிக்குது. இது தெரியாமல் இங்கு சில தலைவர்கள் வீடு தேடி ரேசன் அரிசி வரும்னு பேசுறாங்க. ரேசன் கடைல பொருள்தான் இல்ல. இனி ரேசன் கடையே இருக்காது. ஆடு மேய்ங்கனு சொன்னா சிரிச்சாய்ங்க. பால் குடிக்கிறது அவமானம், நெய் ரோஸ்ட்டுனு கேக்குறது அவமானம் இல்லயா? ஒரு கிலோ கறி ஆயிரம் ரூபாய். ஞாயிற்றுக்கிழமை கசாப்புக் கடைல வரிசையில நிக்கிறான். படிக்கிறவன் ஆடு மேய்க்கிறது அவமானம்னு உளவியலா ஆக்கிவச்சிருக்கான். சென்னைக்கு வா, படிச்சவன் ஞாயிற்றுக்கிழமை கடற்கரைல நாய மேச்சிகிட்டிருக்கான்.

ஆந்திராவுல இருந்து உனக்கு கறி வருது. நீ ஏன் வளர்க்கலை? பாலின் சந்தை மதிப்பு மட்டும் 3.5 லட்சம் கோடி ரூபாய். அங்க ஓடிரணும், சாராயக் கடைய மூடிரணும். சாராயப் பொருளாதாரம் 25, 500 கோடி. அதை மூடிட்டு தென்னம்பால், பனம்பால் வரட்டும்.

நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள், தேர்தலுக்குத் தேர்தல் மிக்சி, கிரைண்டர், வாசிங் மெசின் இலவசம் என அறிவிக்கிறார்கள். அடுத்து ஐயன் பாக்ஸ் தருவார்கள் துணியைத் தேய்க்க.. விட்டால் முதுகைத் தேய்த்துவிடுவார்கள்.

ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதிக அந்நியச் செலாவணியை ஈட்டுவது மாட்டுக்கறிதான். உலகத்திலேயே மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிற நாடு இந்தியா. பாலை அதிகமா ஏற்றுமதிசெய்வது பிரேசில் நாடு. நான் ஏற்றுமதி செஞ்சா ஆகாது.

பிரதமரே சொல்றார்.. மீ இந்துஸ்தானி ஹை… நம்பர் ஒன் ஹை..ங்கிறாரு.. அதைத்தான் நானும் செய்வேன்கிறேன்.

உலகில் எம்மொழியும் கற்போம்.. வாழ எம்மொழி தமிழ் கற்போம், தமிழினம் வாழ தாய்மொழியில் கற்றவன் எல்லாம் படைக்கிறான்; தாய்மொழியில் கல்லாதவன் பயன்படுத்துறான். உலகில் எல்லா நாடும் மேட் இன், என் நாடு மட்டும்

மேக் இன்.

இந்த மேக் இன் எப்படிப்பட்ட பொருளாதாரம்.. வாடகைத் தாய் பொருளாதாரக் கொள்கை.. எப்படி.. கர்ப்பப் பை என்னுடையது.. பிள்ளை அவனுடையது..சுமக்குறது நான்.. பெத்ததைத் தூக்கிட்டுப் போயிருவான்.. அதுதான் மேக் இன். நாங்க மேட் இன்..” என்று சீமான் பேசினார்.

முன்னதாக, கீழ்பென்னாத்தூர் பேருந்துநிலையம், செஞ்சி இந்தியன் வங்கி முற்றம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்துநிலையம், குறிஞ்சிப்பாடி- வடலூர் பேருந்துநிலையம், திட்டக்குடி- தொழுதூர் பேருந்துநிலையம், குன்னம் தொகுதி லப்பக்குடிகாடு, பெரம்பலூர் காமராசர் வளைவு ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தபடி சீமான் பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார்.

ஆங்காங்கே பிரச்சாரக் கூட்டத்தில் பேசிமுடித்தவுடன், மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற ’காட்டுவழி போற பொண்ணே கலங்கிநிக்காதே’ படத்தின் மெட்டில், ‘ஓட்டுப்போடப் போற பொண்ணே ஒதுங்கிநிக்காதே..’ எனும் பாடலையும் சீமான் பாடுகிறார்.

Related posts

Leave a Comment