மேல் சாதிக்காரர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் கீழ் சாதி மக்களைப் பற்றி நிறைய படங்கள் வந்தாயிற்று. கலைப்புலி தாணுவின் மிக பிரமாண்டமான தயாரிப்பில், மண்வாசனையுடன் புதிதாய் இன்னொன்று…
பொடியன்குளம் என்ற அந்த கிராமத்தின் வழியாக பேருந்து போக்குவரத்து இருக்கிறது. ஆனால், அந்த கிராமத்தினர் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்பதால், அந்த கிராமத்தில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. அதனால் அந்த கிராமத்துப் மக்கள் மற்ற ஊர்களுக்குப் போய் வருவதில் ஏகப்பட்ட சிரமங்களை அனுபவிப்பதோடு, பிள்ளைகளும் மற்ற ஊர்களுக்குப் போய் படிக்க முடியாத சூழ்நிலை. அத்தனைக்கும் காரணம் அடுத்த ஊர் உயர் சாதிக்காரர்களின் செல்வாக்கு.
அந்த செல்வாக்கால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வலிகளைச் சுமந்த குடும்பத்திலிருந்து கர்ணன் என்ற பெயர் சுமந்த இளைஞன் கொந்தளித்து எழுகிறான். அவனது கோபத்திலும் கொந்தளிப்பிலும் நியாயம் இருப்பதால் ஊர் மக்கள் அவனுடன் கை கோர்க்கிறார்கள். உயர் சாதிக்காரர்களுடன் கடுமையாக மோதுகிறார்கள். விளைவாக பொடியன் குளம் மக்கள் கொடுரமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது வீடு வாசலும் சின்னாபின்னமாக்கப்படுகிறது… மோதலின் முடிவிலாவது சாதித்திமிர் அடங்கியதா? பொடியன் குளத்தில் பேருந்து நின்றதா? கிளைமாக்ஸ் இதுதான்.
மூன்று வருடங்கள் முன் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். அதிலும் சரி இதிலும் சரி மேல்சாதி – கீழ்சாதி மோதல்தான் கதைக்களத்திள் அஸ்திவாரம்!
பேருந்துகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைத்தபோது கலவரம் வெடித்த காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.
ஆதிக்கத் திமிரால் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் போராளியாக, கதைநாயகன் கர்ணனாக தனுஷ். இளவயசுக்கே உரிய தெனாவட்டு மிதப்பு, காதல் கதகதப்பு என ஜாலியாக திரிவதாகட்டும், போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக சூறாவளியாய் சுழன்றடிப்பதாகட்டும் தனுஷ் நடிப்பில் வழக்கம்போல் அசுரத்தனம்!
தனுஷுக்கு ஜோடியாக ரஜீஷா விஜயன். கிராமத்துப் பெண் கேரக்டருக்கு செம பொருத்தம்.
ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தலையைக் கொடுத்து மல்லுக்கு நிற்கும் மனிதனாக, தனுஷுக்கு தாத்தாவாக லால். ஆஜானுபாகு உடலும் கதாபாத்திரத்துக்கேற்ற உடல்மொழியுமாய் அசத்துகிறார்.
தனுஷுக்கு தங்கையாக லெஷ்மிபிரியா, அப்பாவாக பூ ராம், உயர் சாதிக்காரராக அழகம் பெருமாள்… இன்னும் இன்னும் படத்தில் நடிகர் நடிகைகள் ஏராளம். அத்தனைப் பேருக்கும் கனமான பாத்திரங்கள்.
போலீஸ் உயரதிகாரியாக கொடூர முகம் காட்டி மிரட்டுகிறார் நட்டி நட்ராஜ்.
துளிகூட காமெடி செய்யாத யோகிபாபுவைப் பார்ப்பது சற்றே புது அனுபவம். மனிதரின் நடிப்பு அத்தனை யதார்த்தம்!
பின்னணி இசைக்காக சந்தோஷ் நாராயணனை எத்தனை பாராட்டினாலும் தகும். படத்தில் பேருந்து நொறுக்கப்படும் காட்சியில் பின்னணி இசை அதிர்கிறது. கண்டா வரச் சொல்லுங்க’ பாடலின் இசையில் அத்தனை கம்பீரமும் அழகும் நிரம்பி வழிகிறது!
கதை நடப்பது சிறிய கிராமத்தில். அதை இத்தனை பிரமாண்டமாக திரைக்குள் விரியச் செய்ய முடியுமா என ஆச்சரியம் தருகிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!
கிராமத்து வீடுகள், தலையில்லாத சிலை, களிமண் பொம்மைகள் என காட்சிக்கு காட்சி கலை இயக்குநரின் உழைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. செல்வாவின் எடிட்டிங் நேர்த்தி!
களிமண் பொம்மைத் தலை சுமந்த சிறுமி, கால் கட்டப்பட்ட கழுதை என குறியீடுகளால் கதையை நகர்த்திச் சென்றிருப்பதும் ஈர்க்கிறது.
இரு ஊர்களுக்குமான பிரச்னை போலீஸுக்கும் கீழ் சாதி மக்களுக்குமான பிரச்னையாக பயணித்து முடிவது சற்றே நெருடல்.
சாதி மோதல் குறித்த படம்தான் என்றாலும், சற்றே வித்தியாசமாக கிராமத்தில் பேருந்து நிற்காத (உண்மைச்) சம்பவத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பதும், படத்தை யதார்த்த சினிமாவாக உருவாக்க அதிகம் மெனக்கெட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் கர்ணன் உருவாக்கத்தில் உயரம் தொட்டிருக்கிற யதார்த்த சினிமா!