’99 சாங்ஸ்’ சினிமா விமர்சனம்

இந்தியில் ஒரு ஆங்கிலப் படம் என்று சொல்லும்படியான மேக்கிங்கில் ஒரு படம்!

முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக வைத்து காதல் உணர்வைக் கலந்துகட்டிய கதை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக களமிறங்கிய முதல் படைப்பு. இந்தியில் உருவாகி தமிழில் மொழிமாற்றமாகி ரிலிஸாகியிருக்கிறது!

கதை… தனது மகன் இசை மீது அதீத ஆர்வமாக இருக்கிறான். அந்த ஆர்வத்திற்கு தந்தை தடைபோடுகிறார். அதற்கு காரணம் இல்லாமலில்லை.

தந்தையின் தடையை மீறி இசை கற்றுக் கொள்கிற அந்த மகனுக்கு ஒரு காதலி. காதலியின் தந்தை கோடிகளில் புரள்பவர். அவர் தனது மகளை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்படியான பாடலை உருவாக்கு என்கிறார். காதலியின் தந்தை சொன்னதை சவாலாக ஏற்று அந்த பாடலை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான்.

அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறான். அவற்றையெல்லாம் எப்படி சமாளிக்கிறான் என்பதும் அவன் நினைத்த பாடலை உருவாக்கினானா என்பதுமே ’99 சாங்ஸ்’ படத்தின் கதை.

கதையை ஏ.ஆர். ரஹ்மான் எழுத, விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகன் எஹான் பத் இசையில் சாதிக்கத் துடிப்பது, காதலியைப் பிரிந்து தவிப்பது, தனது இசையார்வத்தை ஊக்குவிக்கிற இளம் பாடகியின் மீது நேசம் காட்டுவது, துளிகூட போதை விரும்பாதவனாக இருந்தும் சந்தர்ப்ப சூழலால் போதைக்கு அடிமையானவனாக கருதப்பட்டு மறுவாழ்வு மையத்தில் தள்ளப்பட்டு தவிப்பதாகட்டும் எஹான் பத் நடிப்பில் கெத்து!

எஹானின் காதலியாக எடில்ஸி. அழகான அந்த ஹிந்தி முகத்தில் சிந்தும் மென் புன்னகையும் வாய் பேச முடியாததால் உணர்வுகளை கண்களால் கடத்துவதும் ஆஹா!

மனிஷா கொய்லாரா, லிசா ரே என தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்த நட்சத்திரங்களும் படத்தில் உண்டு.

படம் முழுக்க வட இந்திய முகங்கள் ஆக்கிரமித்திருப்பது, காட்சிகள் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போலிருப்பது, ஜாஸ் இசையின் ஆதிக்கம் என்றிருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் படத்துடன் ஒன்றிப் போக இயலவில்லை.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் வசனங்கள் ஆறுதல்!

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், குரலில் படம் நெடுக பாடல்கள் அணிவகுக்கின்றன. பாடல்கள் மேற்கத்திய இசையில் குறிப்பாக ஜாஸ் இசைக்கலவையில் உருவாகியிருப்பதால் அந்த இசையை நேசிப்போரை அதிகம் கவரும்.

காட்சிகள், கதை நிகழும் இடங்கள் அனைத்துமே ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போன்ற தரத்தில் படமாக்கப் பட்டிருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த படம் இசையார்வம் கொண்டோருக்கு, இசையில் புதுப்புது உயரங்களை எட்ட நினைப்போருக்கு உந்துசக்தியாகவும் பாடமாகவும் இருக்கக்கூடும். மசாலாப் பட ரசிகர்களுக்கு திருப்தி தராது!

Related posts

Leave a Comment