‘மதில்’ சினிமா விமர்சனம்

உரிமைக்காக குரல் கொடுத்து, அது கிடைக்காமல் போகும்போது போராட்டத்தைக் கையிலெடுப்பவனுக்கு நேர்கிற கஷ்ட நஷ்டங்களை மையப்படுத்தி எக்கச்சக்க படங்கள் வந்தாயிற்று. அந்த வரிசையில் இன்னொரு படம்…

படத்தின் நாயகன் எந்த உரிமைக்காக போராடுகிறான் என்பதுதான் ‘மதில்’ படத்தின் தனித்துவம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்!

இந்த படம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நேரடியாக, ‘ஜி 5’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சிறுவயதிலிருந்தே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து, பணம் சேர்த்து தனது 58-வது வயதில் தனது விருப்படி வீட்டைக் கட்டி முடிக்கிறார் படத்தின் ஹீரோவான கே.எஸ். ரவிக்குமார்.

புதுமனை புகுவிழா நடந்த சில நாட்களிலேயே அவர் வீட்டு சுவற்றில் அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரபலத்தின் படம் வரையப்பட்டு பிரசார வாசகங்கள் எழுதப்படுகிறது. அதைக் கண்டு வெறுப்பாகிற கே.எஸ். ரவிக்குமார் விளம்பரத்தை அழிக்கிறார். அதைக் கண்டு அரசியல் பிரபலம் கொதிக்கிறார்; கே.எஸ். ரவிக்குமாருக்கு தொல்லைமேல் தொல்லை தருகிறார்; ஒரு கட்டத்தில் கொலை செய்கிற அளவுக்கு இறங்குகிறார். அந்த எதிர்ப்புகளையெல்லாம் இன்றைய காலகட்டத்தின் வசதிகளை வைத்து அறிவுபூர்வமாக எப்படி சமாளிக்கிறார் என்பதே திரைக்கதை…

கே.எஸ். ரவிக்குமாரின் வயதுக்கேற்ற கதாபாத்திரம். பார்த்துப் பார்த்து வீடு கட்டுவதாகட்டும், சுவற்றில் விளம்பரத்தைப் பார்த்து மனம் கொதிப்பதாகட்டும், அரசியல்வாதியிடம் அடி வாங்கி இயலாமையால் உடல் குறுகுவதாகட்டும் கே.எஸ். ரவிக்குமார் அனுபவமிக்க, எளிமையான, இயல்பான நடிப்பால் மனதில் நிறைகிறார்.

அரசியல்வாதியாக மைம் கோபி. பல படங்களில் பார்த்த அதே வில்லத்தனம். கே.எஸ். ரவிக்குமாருக்கு மகளாக திவ்யா துரைசாமி. தனது அப்பா துவண்டு போகும் தருணங்களில் ஊக்கம் தரும்போது முகபாவங்களால் கவனம் ஈர்க்கிறார். அந்த சிரிப்பு அழகு!

‘ஜாங்கிரி’ மதுமிதா, அந்தக் கால சரோஜா தேவி கெட்டப்பில் வந்து கலகலப்பூட்ட, காவல்துறை அதிகாரியாக ஸ்ரீநாத் தான் ஏற்ற பாத்திரத்தில் நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

காத்தாடி ராமமூர்த்தியின் நடிப்புப் பங்களிப்பில், வசன உச்சரிப்பில் அத்தனை நேர்த்தி. லொள்ளுசபா சாமிநாதனும் சிரிக்க வைக்கிறார்.

நாடகம் மாதிரியான காட்சிகளின் கோர்வையாய் நகர்கிற கதையோட்டம், சட்டென வேகமெடுத்து மீடியா பரபரப்பு, சுவர்களை ஆக்கிரமிப்பு செய்கிற அரசியல்வாதிகள், விளம்பரங்களால் பாழாகிற பொதுச்சுவர்கள் பற்றிய அக்கறையான அலசல், சுவர்களில் விளம்பரம் செய்வதில் சுவருக்கு சொந்தக்காரர்களுக்கு இருக்கிற சட்டரீதியான உரிமை என இதுவரை தமிழ் சினிமா தொடாத விஷயங்களை கையிலெடுத்து வேகப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறது.

கே.எஸ். ரவிக்குமார் ட்ரூப் வைத்து நாடகம் போடுபவர் என்றெல்லாம் வருகிற காட்சிகள் ஆரம்பத்தில் இதெல்லாம் தேவையா? என்பதுபோல் தோன்றினாலும், கதையோட்டத்தில் நாடக ட்ரூப்பிலுள்ள கேரக்டர்கள் இணைந்து பயணிக்க வைத்திருப்பது ‘அட’ போட வைக்கிறது.

கே.எஸ். ரவிக்குமாரை கொன்றுதீர்க்க அடியாட்கள் வீட்டுக்குள் நுழையும்போது அவர்களை மீடியா நபர்கள் சூழ்கிற காட்சி புத்திசாலித்தனம்.

‘வாழுற காலத்துல ஒருத்தனுக்கு சொந்த வீடு இல்லாம இருக்கலாம்; ஆனா, அவன் சாகுற காலத்துல சொந்த வீடு இருக்கணும். அப்போதான் சாவுக்குக்கூட மரியாதை.’ -வசனங்களில் இருக்கிறது உயிரோட்டம்.

எல்.வி. முத்து கணேஷின் பின்னணி இசையும், ஜி. பாலமுருகனின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம்.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைக்களத்தை கையாண்டதற்காக இயக்குநர் மித்ரன் ஜவகரை அழுத்தமாக கை குலுக்கிப் பாராட்டலாம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம். பார்த்தால், நம் சுவரை கண்டபடி நாசமாக்குகிறவர்களை சட்டரீதியாகவே எதிர்க்கலாம் என்ற உந்துதலும், நம் சுவர் நம் உரிமை என்ற எண்ணமும் உருவாகும். படத்தின் நோக்கம் அதுதான்!

Related posts

Leave a Comment

eleven + 17 =