சீமானின் நாம் தமிழர் கட்சி எதிர்காலம்?

முத்துவேலர் கருணாநிதியை ஈன்றெடுத்த திருக்குவளைக்குப் பக்கத்து ஊர் அந்த 23 வயது இளைஞனுக்கு. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது, திருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது.

தலையில் பலத்த அடி. நினைவு போய் விட்டது. கை, கால்கள் எல்லாவற்றிலும் பலத்த காயம். கிட்டத்தட்ட கோமா நிலை. கடுமையான வறுமைக்கு உள்ளான குடும்பத்திலிருந்து தலையெடுத்து வந்த தலைமகன். தங்கைக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, தாய், தந்தைக்காக சின்னதாக ஒரு வீடும் கட்டிவிட்டு, பேருவகையோடு தன் இதயத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற பேச்சைக் கேட்டுவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த விபத்து.

தஞ்சையில் சிகிச்சைக்குச் சேர்த்து, வீட்டை விற்று, சேமிப்பையெல்லாம் கரைத்து, தன் மகனைக் காப்பாற்ற அந்த தாயும் தந்தையும் போராடினர். கோவையில் அவனுக்கு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கிறார்கள். அங்கேயும் பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர்ந்தது சிகிச்சை. கை, கால், தலைக்காயங்கள் குணமாகிவிட்டன. நினைவு மட்டும் வரவில்லை. அப்போதுதான் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தன் நண்பரைப் பார்க்க வருகிறார் அந்த தலைவன். அந்த அறைக்கு எதிரில்தான் அந்த இளைஞன் சிகிச்சை பெறுகிறான். இவர் வந்ததாகத் தெரிந்ததும், அவரிடம் வந்து அவனுடையும் தாயும், தங்கையும் கதறி அழுகிறார்கள். ‘உங்க பேச்சுன்னா போதும்யா அவனுக்கு, சோறு தண்ணியே வேணாம். இப்பக்கூட நீங்க வந்திருக்கீங்கன்னா அவன் எந்திரிச்சு உட்காந்துருவான்யா’ என்று உள்ளம் உடைய கதறுகிறார்கள். அந்த இளைஞனின் அறைக்குச் சென்று பேசுகிறார் அந்த தலைவன்.

‘‘டேய்! தம்பி…அண்ணன் வந்திருக்கேன்டா…சீக்கிரமா எந்திரிடா. நம்ம செய்ய வேண்டிய வேலை நிறையா இருக்குல்ல!’’ என்று அவன் காதருகே பேசுகிறார். எந்த அசைவும் இல்லை. கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி, அவனுடைய தாயிடம் ‘என் தம்பி எந்திரிப்பான். எனக்குச் சொல்லி அனுப்புங்க’ என்று சொல்லி விட்டுச் செல்கிறார். சிகிச்சைக்குப் பணமின்றி, ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள். தலைவனின் பேச்சு அவன் காதிலேயே கேட்கும் வகையில் சத்தமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் அந்தி சாயும் நேரத்தில் தலைவனின் உணர்ச்சிமிக்க உரை ஒலிக்கும்போது, அவன் செவிகளுடன் கண்கள் திறக்கின்றன. அவன் உடலில் அசைவுகள் வருகின்றன. அவன் தலைவனின் பேச்சு, அவனுக்கு மீண்டும் உயிர் மூச்சு கொடுக்க எழுகின்றான் அந்த இளைஞன். அந்த ஏழையின் வீட்டில் உணர்ச்சியாய் நன்றி பெருக்கெடுத்தோடுகிறது. சீற்றம் கொள்ள வைக்கும் அந்த பேச்சுக்குச் சொந்தமான தலைவன்…சீமான்.

இது நிஜமாக நடந்த நிகழ்வு. சீமானின் கூட்டத்துக்குப் போய்ப்பார்த்தால்தான் அந்த ரசவாதம் புரிகிறது. அவர் குரலை உயர்த்தி, இறக்கி, சத்தமாய்ச் சிரித்து, கையை உயர்த்தும்போது அங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் முகங்களில் ஒரு லட்சம் வாட் ஒளிச்சிதறல்கள். அது ஒரு விதமான நோக்கு வர்மம் போல இருக்கிறது. அதுதான் இந்தத் தேர்தலில் வாக்கு வரமாகவும் மாறியிருக்கிறது.

இந்தத் தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டிதான் என்கிறார் எடப்பாடி. மதவாதக் கூட்டணிக்கும், மதச்சார்பற்ற கூட்டணிக்கும் இடையிலான சித்தாந்தரீதியிலான யுத்தம் என்கிறார் ஸ்டாலின். ஊழலுக்கும் நேர்மைக்குமான குருஷேத்திரம் என்கிறார் கமல்; இது திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் இடையிலான கருத்தியல் போர் என்கிறார் சீமான்.

உண்மையைச் சொல்லப்போனால், அங்கீகாரம் பெற்ற கட்சி ஒவ்வொன்றும் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணியின்றிப் போட்டியிட வேண்டுமென்ற தேர்தல் சீர்திருத்தத்தையும், மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதையும் முதலில் அமல்படுத்திய பெருமை சீமானையே சேரும். இந்தத் தேர்தலில்தான் அவர் தலைவர்களின் பட்டியலில் தனித்துவமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடி, ஸ்டாலின், கமல், தினகரன் என எல்லோருக்குமே இது ஒவ்வொரு வகையில் முக்கியமான தேர்தல் என்றால் சீமானுக்கு இந்த தேர்தல் நாள்தான் முதல் அறுவடை நாள் என்று சொல்ல வேண்டும்.

கடந்த காலத் தேர்தல்களில் எல்லாம் அவர் வாங்கிய வாக்குகள், எந்தக் கணக்கிலும் சேர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் அவர் துவக்கியிருப்பது புதிய கணக்கை. அவர் பிஜேபியின் ‘பீ’ டீம் என்ற குற்றச்சாட்டு, இப்போதும் ஒலித்தது. அவருடைய உரை வீச்சு, கதைக்கு உதவாத வெறும் பேச்சு என்று விவாதித்தவர்களும் இருக்கிறார்கள். அவர் வளர்வது, தமிழகத்துக்கே ஆபத்து என்றும் கூட வெறுப்பை உமிழ்ந்தவர்களும் நிறையப்பேர். ஆனால் இந்தத் தேர்தலில் சீமானுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை, அசாத்தியமானதாக ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்தபின்பு, ஒவ்வொரு கட்சித்தலைவரும் தங்களுக்கான வெற்றி வாய்ப்புகளைக் குறித்து விசாரித்து அறிந்ததைப் போலவே சீமானும் விசாரித்திருக்கிறார். அதில் அவருக்குக் கிடைத்த பல தகவல்கள்தான், அவருக்கு இத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமென்பது பற்றி அவருக்குள் இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் சீமானுக்கு நெருக்கமான தம்பிகள் சிலர்…

‘‘தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்திய ஒரே கட்சி என்கிற வகையில், இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சி என்பது எங்கள் கட்சிதான். ஆனாலும் இந்தத் தேர்தலில் நாங்கள் ஜெயிப்போம் என்று அண்ணனும் போட்டியிடவில்லை. எங்களையும் போட்டியிட வைக்கவில்லை. இந்தத் தேர்தலில் நாங்கள் விதைகளை விதைத்துள்ளோம். 2026 தேர்தலில்தான் எங்களுடைய அறுவடை இருக்கும்.

இவற்றில் பல விதைகள் பெரிய மரமாகலாம். சில விதைகள் பயனற்றுப் போகலாம். அங்கே புதிய விதைகளை நடுவோம். அடுத்த தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். அல்லது ஆட்சியில் பங்கேற்போம். இதுதான் எங்கள் அண்ணன் சொல்கின்ற நம்பிக்கை வார்த்தைகள். இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக வாக்குகள் வாங்குவோம் என்று அவர் நம்புகிறார்.

அதற்கேற்ப வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனமாக இருந்தார். கட்சி அனுபவம், அவர்களின் பின்னணி, சமுதாயப்பணி என்ன, சாதி பலமென்ன, பேச்சுத்திறமை இருக்கிறதா என்றெல்லாம் பல விஷயங்களைப் பார்த்தார். தேர்தல் செலவைப் பொருத்தவரை, 5 லட்சத்திலிருந்து 18 லட்சம் வரை செலவழித்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் நன்கொடையாகக் கிடைத்த தொகைதான். வாக்குப்பதிவு முடிந்தபின்பு, அவருக்குக் கிடைத்துள்ள தகவல்கள், அவரை மிகவும் உற்சாகமாக மாற்றியுள்ளன.

எடப்பாடியால் கொங்கு பெல்ட்டில்தான் அதிமுக அதிகம் ஜெயிக்க முடியும் என்கிறார்கள். கமலுக்கு நகர்ப்புறங்களில் மட்டும்தான் வாக்கு வங்கி இருக்கிறது. தினகரன் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளை விட்டால் வேறெங்கும் ஆதரவு இல்லை. பா.ம.க.,வை எடுத்துக்கொண்டால் வடமாவட்டத்தைத் தாண்டி வேறு மக்களுக்குத் தெரியவே தெரியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பரவலாக ஆதரவைப் பெற்ற கட்சி நம் கட்சி மட்டும்தான். அந்த வகையில் இந்தத் தேர்தலே நமக்கும், திமுகவுக்குமான நேரடிப் போட்டி என்பதுதான் அவருடைய கருத்தாக இருக்கிறது.

அதிமுகவில் இரட்டைத் தலைமை இருப்பதை அதன் தொண்டர்களே ஏற்கவில்லை. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஆறு சீட்தான் என்பதால் தேமுதிக வெளியே வந்தது. அவர்களுக்கு 60 சீட்டுகள் கொடுத்தார் தினகரன். அவரிடம் 60 தொகுதிகளுக்கு ஆளில்லை என்பதுதான் நிஜம். கமலுக்கு 100 தொகுதிகளைத் தாண்டி நிறுத்துவதற்கு ஆளே கிடைக்கவில்லை. நாங்கள்தான் 234 தொகுதிகளிலும் துணிவோடு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். விஜயகாந்த் தனியாக நின்றபோது 8 சதவீத வாக்குகள் வாங்கினார். கடந்த 2016 தேர்தலில் ஏற்கனவே மூன்று அணிகள் இருந்த நிலையில், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி தனி அணியாக பா.ம.க.,போட்டியிட்டபோது அவர்களுக்கு 5.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதேபோன்று, தனி அணி என்பதை தமிழக மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.அதனால் மூன்றாவது அணி என்பது அணியல்ல. அது தனி என்கிறார் எங்கள் அண்ணன். அந்த தனி என்பது நாம் தமிழர்தான்.

இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக மக்கள் அங்கீகரித்திருப்பது, ஸ்டாலினையும், தன்னையும் மட்டும்தான் என்கிறார் அண்ணன். ஏனென்றால் கலைஞரின் பேரன், திமுகவின் அடுத்த வாரிசு என்று சொல்லக்கூடிய உதயநிதி நிற்கும் தொகுதியிலும், விரைவில் முதல்வராக பதவி ஏற்பேன் என்று சொல்லும் ஸ்டாலின் நிற்கும் தொகுதியிலும் 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகவில்லை. அதே சென்னையில் அண்ணன் நின்ற தொகுதியில் மட்டும்தான் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சொல்வதானால் எங்கள் அண்ணனின் பேச்சுக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. அண்ணனைப் பொருத்தவரை, இந்தத் தேர்தல் திராவிடமா தமிழ்தேசியமா என்பதற்காக நடந்த கருத்தியல் போர். அதில் முதல் ரவுண்டில் எங்கள் அண்ணன்தான் முதலில் நிற்கிறார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் ஓர் அதிசயம் நடக்கும் என்று ஜந்திபாத் அமைப்பின் எக்ஸிட் போலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நிகழ்த்திக் காட்டப்போவது நாங்கள்தான்!’’ என்று தன்னம்பிக்கையோடு பேசினார்கள் சீமானின் அன்புத் தம்பிகள்.

பேசிப்பேசியே வளர்ந்த கட்சி திமுக…அதற்கு எதிராகப் பேசிப்பேசியே விரைவில் வீழ்த்தி விடுவார் என்று சீமானின் சீற்றத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் நாம் தமிழர் தம்பிகள் அனைவரும். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள், தலைவர்கள் இருக்கும்போது, திமுகவையும் தன்னையும் மட்டுமே எல்லோரும் குறி வைப்பதற்குக் காரணம் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புவதற்கும், இவர்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கைக்கும் ஏதோ ஒரு நேர்கோட்டில் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது.

திராவிடத்தை வெல்லப்போவது தமிழ் தேசியமா…அசுரப்போர் தொடுக்கும் ஆரியமா என்பதற்கு காலம் எப்போது பதில் சொல்லுமோ தெரியவில்லை. ஆனால் மே 2 ல் சீமானின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை கிடைத்து விடும்.

Related posts

Leave a Comment