இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு மொழி சினிமா துறைக்கு அடுத்தபடியாக அதிக முதலீடு செய்யக்கூடியது தமிழ் திரைப்படத்துறை வருடந்தோறும் படங்கள் தயாரிப்பு செலவில் 60% சதவீதம் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் சங்கங்கள் தொடங்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள், வருமானம் வரக்கூடிய வணிக வளாகங்கள் உள்ளன. இது போன்ற பேரிடர் காலங்களில், வேலைவாய்ப்பு இல்லாத நாட்களில் வெளியார் நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்காமல் தனது உறுப்பினர்களை பாதுகாக்கின்றனர்
பாரம்பர்யம் மிக்கதென்னிந்திய நடிகர்கள் சங்கம் மட்டுமே இது போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் உறுப்பினர்களுக்கு உதவ கௌரவ பிச்சையாக நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது பெயரளவில் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாக இருக்கின்ற இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நாடக நடிகர்களும், தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமே.
தெலுங்கு,மலையாள, கன்னட படங்களில் நடிக்கும் நடிகர்கள் எவரும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அதனை தொடரவும் இல்லை இப்போதைய முன்னணி நடிகர்கள் உறுப்பினர்களாக சேரவும் இல்லை சங்க நிர்வாகிகளாக இருந்த சிலரின் சுயலாப நோக்கத்திற்காக இன்று வரை பெயரை மாற்றாமல் வைத்திருக்கின்றனர் என்கின்றனர் மூத்த நாடக நடிகர்கள்
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கும் இடம் மட்டுமே நடிகர் சங்கத்திற்கான சொத்து அதனை வருமானம் தரக்கூடிய வணிக வளாகமாக கட்டி முடிக்க எடுத்த முயற்சி நிர்வாகிகளுக்கானதேர்தல் சம்பந்தமாக ஏற்பட்ட நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வராததால் நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வர முடியவில்லை மொத்தத்தில் சிலரின் தனிமனித மோதல்,, ஈகோ காரணமாக நடிகர் சங்கம் நிர்வாகிகள் இல்லாத அமைப்பாக, ஊனமான செயல்பட முடியாத அமைப்பாக முடக்கப்பட்டிருக்கிறது
இந்த சூழ்நிலையில்தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் சார்பில் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். குறிப்பாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 80 சதவீதம் பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருந்துக்கொண்டு அன்றாட வருமானத்தை நம்பி வாழ்பவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் ஃபெஃப்சியில் அங்கம் வகிக்கவில்லை. மேலும் வெறும் 10 சதவீத உறுப்பினர்களே அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரையறைக்குள் வருகிறார்கள். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு எந்தவித உதவியோ நிவாரணமோ சரியாக கிடைப்பதில்லை. மேலும் நடிகர் சங்கத்துக்கு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் சில நயவஞ்சகர்களால் தடைபட்டு இருக்கிறது. எனவே சங்கத்தின் மூலமாகவும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அலுவலருக்கு கடிதம் வேண்டுகோள் வைத்ததோடு அதனை நானே தொடங்கி வைத்தேன். மேலும் முன்னணி நடிகர்களுக்கும் கோரிக்கை வைத்தேன். சிறப்பு அலுவலரும் வேண்டுகோள் வைத்தார். இவற்றின் விளைவாக சுமார் 42 லட்சம் ரூபாய்க்கு மேல் சேர்ந்து அதனை சிறப்பு அலுவலரே நேரடியாக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இப்போது கடந்த ஆண்டை விட மோசமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழலில் முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்னால் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நேரடியாகவும் அந்த அந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் உதவிகள் செய்துவருகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் தங்களது கரங்களும் கோர்த்தால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று நம்புகிறேன்.
அதனால் தான் இந்த கடிதத்தை அனைத்து நடிக, நடிகைகளுக்கும் ஒரு வேண்டுகோளாக எழுதுகிறேன். ஃபெஃப்சி அமைப்புக்கு தாங்கள் உதவிகள் செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஃபெஃப்சியில் நமது சங்கம் அங்கம் வகிக்கவில்லை. அங்கம் வகித்து இருந்தால் நமது உறுப்பினர்களுக்கும் அந்த உதவிகள் கிடைத்திருக்கும். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களும் பயனடையும் வகையில் தனியாக உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி அவர்கள் வீடுகளில் அடுப்பு எரிவதை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அவர்களது வாழ்வாதாரம் காக்க கையேந்துகிறேன்… உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்… நன்றி’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்..