மறைக்க சொல்லும் மத்திய அரசு மறுக்கும் தமிழ்நாடு அரசு

தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகா் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது.

இந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும், ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆன்லைனில் வெளியிடக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் தேதியே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டாலும், தடுப்பூசி இருப்பு நிலவரத்தை தமிழ்நாடு அரசு தினமும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சைதாபேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1,060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி வரவுள்ளது. தடுப்பூசி வந்த பின் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் இடங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் அரசு பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்துக் கடந்த 20 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கொரோனா காலத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

500-600 ரூபாய்க்கு மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு விலை நிர்ணயித்ததால் அரசுக்கு தினமும் ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. அதிகமாக வசூலிக்கப்பட்ட மருத்துவர், செவிலியருக்கான தங்கும் அறை வாடகையும் குறைக்கப்பட்டுள்ளது .

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

Related posts

Leave a Comment