யூடியூபர் மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர்.

 

சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கிடையில் மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினான அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பப்ஜி மதன், போலீசாரால் என்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டிருந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரிக்கு சென்று பதுங்கியிருந்த மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை பார்த்து அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுததாகவும், தான் செய்தது தவறுதான் என்று கூறி குற்றங்களை ஒப்புக் கொள்வதாகவும் தன்னை மன்னித்துவிடுமாறும் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

 

 

வெளியே செல்லும்போது அடையாளத்தை மறைப்பதாக கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், பொறியியல் படித்த தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், 2 ஆண்டுகளாக பப்ஜி விளையாடி ரூ. 4 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் மதன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மதனின் இரண்டு ஆடி கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள், லேப்டாப், ஐபேட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், மதனின் பேச்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மதன் கைது செய்யப்பட்டதையடுத்து, மதனின் முன் ஜாமீனை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட மதன் இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தியபின் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment