சிவசங்கர்பாபா கைது- டோராடூன் முதல் செங்கல்பட்டு வரை

படிக்கும் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்த சிவசங்கர் பாபா சாமியாரை, தமிழக சிபிசிஐடி போலீஸார் டெல்லி சென்று ஜூன் 15ஆம் தேதி கைது செய்தனர். இந்த ஆபரேஷனை நடத்திய சிபிசிஐடி டீம் போலீஸார் நித்தியானந்தா ஸ்டைலில், வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த சிவசங்கர் பாபாவை அப்படி தப்பிக்க விடாமல் கைது செய்துள்ளனர்.

 

சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கிறது. இங்கு பயிலும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா நடத்திய பாலியல் வேட்டை பற்றி, சில வாரங்களாக அப்பள்ளியின் பழைய மாணவிகள் பலர் புகார்களாக காவல்துறையிலும் சமூக தளங்களிலும் பதிவு செய்தனர்.

 

 

 

 

இந்த நிலையில் அப்பள்ளி மாணவிகளின் புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாபாவின் ஆலோசகர்கள் தப்பிக்க ஏற்பாடுகள் செய்து ஜூன் 9ஆம் தேதியே அவரை விமானம் மூலம் வட இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். பாபாவோடு, அவருக்கு உதவியாக சீனிவாசன் என்பவரும் சென்றார்.

இந்த வழக்கு ஜூன் 14ஆம் தேதி, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும் அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று புகார்களில் மூன்று வழக்குகள் (குற்ற எண் 1/2021, 2/2021, 3/2021) பதிவு செய்யப்பட்டன. சிபிசிஐடி எஸ். பி. விஜயகுமார் ஐபிஎஸ், வழக்கை விசாரிக்கத் துவங்கினார். மூன்று டீம்களை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒரு பணியைக் கொடுத்தார்.அவர் முதலில் 64 ஏக்கரில் அமைந்துள்ள கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் ஆசிரமம், பள்ளி ஆகியவை அமைந்துள்ள வளாகத்துக்கு சென்று இஞ்ச் பை இஞ்ச்சாக விசாரித்தார்.

புகார் கொடுத்த 20 வயதுள்ள ஒரு பெண்ணிடமும் 17 வயதில் உள்ள இரண்டு மாணவிகளிடமும் விசாரித்தார். பெண் பிள்ளைகளிடம் விசாரிக்க வேண்டியிருந்ததால் எஸ்.பி.யோடு கோமதி என்ற பெண் ஆய்வாளரும் சென்றிருந்தார். அப்போது சிவசங்கர் பாபா பள்ளி வளாகத்தில் இல்லை. இவ்வளவு நாட்களுக்கு பிறகு புகார் கொடுக்க என்ன காரணம் என்பதும் விசாரணையின் நோக்கமாக இருந்தது.

“பத்ம சேஷாத்ரி பள்ளி பிரச்சினைகளை முன்னாள் மாணவிகள்தான் கையில் எடுத்தார்கள், அதேபோல் நாமும் விடக் கூடாது என்று முன்னாள் மாணவர்களுடன் வாட்ஸ் அப் குருப் மற்றும் செல்போன் மூலமாகவும் ஆலோசனைகள் செய்தோம். சுஷில் ஹரி பள்ளியின் பல முன்னாள் மாணவிகள் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்கள். சிலர் ஐடி நிறுவனங்களில் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் அவர்களின் ஆதரவோடு நாங்கள் மூவரும் புகார் கொடுக்க முன்வந்தோம்”

என்று அந்த மாணவிகள் கூறியுள்ளார்கள்.

சிவசங்கர் பாபா பெரும்பாலான பிள்ளைகளையும், பிள்ளையின் தாய்களையும் பார்த்துதான் குறிவைத்து அழைத்துள்ளார். தாய் -தந்தை இழந்த பெண் பிள்ளைகள், தந்தையை இழந்த பெண் பிள்ளைகள், கணவனை இழந்த பெண்களை தேர்வு செய்து பாலியல் தொல்லைகள் செய்து வந்துள்ளார் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த விசாரணை ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம்… பாபாவை கண்காணித்து வந்த எஸ்.பி.விஜயகுமார் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருக்கும் லோட்டஸ் மருத்துவமனையில் பாபா இருப்பதை அறிந்தார். 14 ஆம் தேதி இரவே டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூவரையும் அனுப்பி வைத்தார்.விஜயகுமார் சென்னையில் இருந்தபடியே ஆபரேட் செய்துவந்தார். வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றும் அவரது ஐபிஎஸ் பேட்ச் நண்பர்களின் உதவியும் இவ்வழக்கில் அவருக்கு கிடைத்தது.

தனிப்படை சென்று டேராடூன் லோட்டஸ் மருத்துவமனையில் விசாரித்தால் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் பாபா என்று கூறியுள்ளார்கள். ஹரி துவார் சென்றிருப்பாரா, நேபாளம் சென்றிருப்பாரா என்று தனிப்படை சல்லடை போட்டுக்கொண்டிருந்த நிலையில்தான் சிவசங்கர் பாபா டெல்லியில் இருப்பதாக சிபிசிஐடி டீமுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

டெல்லியில் மொழிப்பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் டெல்லியில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரரான எஸ்.பி. சத்யா சுந்தரத்திடம் பேசினார் எஸ்.பி. விஜயகுமார். டெல்லி போலீஸார் உதவியோடு டெல்லிக்குள் தேடிய நிலையில் ஜூன் 15 ஆம் தேதி மாலையில் சிவசங்கர் பாபாவின் சரியான லொக்கேஷனை கண்டுபிடித்தனர்.

டெல்லி சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள மய்யூர் ஹோட்டலில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, டிஎஸ்பி குணர்வர்மன் தலைமையிலான குழுவினர் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அறை எண் 103 இல் காலிங் பெல்லை அழுத்தினார்கள். சீடர் ஒருவர் கதவை திறந்தார். உள்ளே நுழைந்த போலீஸார், ‘நாங்க சிபிசிஐடி ஃப்ரம் தமிழ்நாடு’ என்று சொன்னதும் பாபா எச்சில் கூட விழுங்க முடியாமல் தவித்தார். இவர்தான் பாபாவா என்று போலீஸுக்கும் ஆச்சரியம். காரணம் மொட்டையடித்து கெட்டப்பை மாற்றியிருந்தார்.

 

யாரையோ தொடர்புகொள்ள செல்போன் தேடினார். பிறகு ஹோட்டல் லேண்ட் லைனில் தொடர்பு கொள்ளவும் முயற்சித்தார். ஆனால் அதற்கு முன்பே போலீஸார் அனைத்தையும் துண்டித்து விட்டார்கள்.

’வாங்க… சென்னைக்கு போகலாம். விசாரணை நடத்தணும்’என்று போலீசார் கூறியதும், “ சார் எனக்கு ஹார்ட் பிராப்ளம். மூன்று பிளாக் இருந்துச்சு. டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ செஞ்சுகிட்டு ஸ்டென்ட் வச்சிக்கிட்டு வந்திருக்கேன்’ என்று கூறினார் பாபா தழுதழுத்த குரலில்.போலீஸாரோ, “சரி வாங்க.எய்ம்ஸ் போயி மெடிக்கல் செக்கப் பண்ணலாம்’என்று அழைத்துச் சென்று எய்ம்ஸ் மருத்துவர்களிடம் பாபாவை செக்கப் செய்தார்கள். பாபாவை சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதற்கு மருத்துவர்கள் ஃபிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்தார்கள். டெல்லியிலேயே டேரா போட்டுவிடலாம் என்று கருதிய பாபாவின் முதல் முயற்சி அங்கே முறியடிக்கப்பட்டது.

 

 

அடுத்து டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் பாபாவை ஜூன் 16 ஆம் தேதி ஆஜர்படுத்திய தமிழக சிபிசிஐடி போலீஸார், டிரான்ஸிட் ரிமாண்டு பெற்றனர். அதாவது வழக்குக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கைது செய்யப்பட்ட இடத்தில் உள்ள நீதிமன்றத்திடம் ரிமாண்டு ஆர்டர் பெறுவதுதான் டிரான்சிட் ரிமாண்டு.

 

சரி, சென்னைக்கு போகலாம் என்றதும் முதலில் காரிலேயே தன்னை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்று நினைத்து, ‘சார் சென்னைக்கு அவ்வளவு தூரம் கார்லேயேவா அழைச்சிக்கிட்டுப் போக போறீங்க. என் உடம்பு ஒத்துக்காது. விமானத்தில் கூட்டிக்கிட்டுப் போங்க’ என்று போலீஸாரிடம் வேண்டுகோள் வைத்தார் சிவசங்கர் பாபா. விமானத்தில்தான் போகிறோம் என்றதும் பெருமூச்சு விட்டார்.

ஜூன் 16 ஆம் தேதி இரவு ஒரு கிளாஸ் மோர் வேண்டும் என்று வாங்கிக் குடித்த சிவசங்கர் பாபாவை அன்று இரவு 9 மணிக்கு டெல்லி விமான நிலையம் அழைத்து வந்தனர் போலீஸார். சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு வந்திறங்கினார் சிவசங்கர் பாபா.

அன்று இரவு அவரை தொந்தரவு செய்யாமல் ஜூன் 17 ஆம் தேதி காலை சிவசங்கர் பாபாவை எழும்பூரில் இருக்கும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காலையில் பொங்கல் சாப்பிட்டுவிட்டு விசாரணையை எதிர்கொண்டார் சிவசங்கர் பாபா. எஸ் பி விஜயகுமார் விசாரணையைத் துவங்கினார்.

எதை கேட்டாலும், ‘எல்லாரையும் என் பிள்ளைகளா நினைச்சுதான் படிக்க வைக்குறேன். எனக்கு யாரும் ஆகாதவர்கள் இல்லை” என்றுதான் ஆரம்பத்தில் சொல்லியிருகிறார் சிவசங்கர் பாபா.

அவரிடம் ஆதாரங்களைக் காட்டி குறுக்கு விசாரணை செய்தபோது வெலவெலத்துத் துவண்டு போயிருக்கிறார்.

பிள்ளை மாதிரினு சொல்றீங்க. அவங்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும், கண்ட இடத்துல தடவுவதும் தப்பில்லையா?’ என்று கேட்டபோது, ‘நீங்கதான் தவறாகப் பார்க்குறீங்க. நானோ அவங்களோ அதை அப்படிப் பார்க்கலை” என கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொள்வது போல பேசினார்.

 

நேற்று 8 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நடத்தி முடித்துவிட்டு, மாலை செங்கல்பட்டு மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றனர் போலீஸார். மதியம் ஏதும் சாப்பிடாமல் ஒரு கப் மோர் மட்டுமே வாங்கிக் குடித்துள்ளார் சிவசங்கர் பாபா. செங்கல்பட்டு மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கே, “என்னை சிறைக்கு அனுப்பாதீங்க.எனக்கு உடல் நிலை பிரச்சினை இருக்கு. மூணு வேளையும் மாத்திரை சாப்பிடுறேன்” என்று நீதிபதியிடம் கெஞ்சியிருக்கிறார் சிவசங்கர் பாபா. அவரது வழக்கறிஞர்களும், “பாபாவின் உடல் நலம் கருதி அவரை சிறைக்கு அனுப்பாமல் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்” என்று வாதாடினார்கள்.

 

ஆனால் சிபிசிஐடி போலீஸாரோ, “சிவசங்கர் பாபா நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். அதற்கான மருத்துவ சான்றுகள் உள்ளன. இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன” என்று நீதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

 

இதையடுத்து சிவசங்கர் பாபா ரிமாண்ட் செய்யப்பட்டு நேற்று மாலை 6.30க்கு செங்கல்பட்டு கிளைச் சிறைக்கு அனுப்பப்ப‌ட்டுள்ளார். சிவசங்கர் பாபாவை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் போலீஸ் கஸ்டடி எடுத்து முறைப்படி சிவசங்கர் பாபாவை விசாரிக்க இருக்கிறார்கள் சிபிசிஐடி போலீஸார்.

Related posts

Leave a Comment