சோனியா, ராகுலை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின்.

நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.

 

சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எவரையும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவந்த சோனியாகாந்தி, தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கொடுத்தார். சோனியாவோடு ராகுல் காந்தியையும் சந்தித்த ஸ்டாலின், அப்போது சோனியாவுக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலகிருஷ்ணன் எழுதிய journey of a Civilization: Indus to Vaigai என்ற புத்தகத்தை சோனியா காந்திக்கு ஸ்டாலின் பரிசளித்தார். ஸ்டாலின்- சோனியா சந்திப்பை அடுத்து இந்தப் புத்தகம் ட்விட்டரில் பேசுபொருளாகிவிட்டது.

 

ஸ்டாலின் சந்திப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின், திருமதி துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்ததில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நானும் மகிழ்ச்சி அடைந்தோம். தமிழ் மக்களுக்காக உறுதியான மகிழ்ச்சியான தமிழகத்தை கட்டியெழுப்பும் பணியில் திமுகவோடு சேர்ந்து காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்”என்று தெரிவித்துள்ளார்.

 

சோனியா, ராகுல் சந்திப்பை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Related posts

Leave a Comment