தமிழக ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிர் அளிப்பது பற்றியும், ஊழல் ஒழிப்புத் துறை முடுக்கிவிடப்படுவது பற்றியும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இந்தியாவில் 20 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவியபோதும் கடந்த அதிமுக ஆட்சியில் அது தாமதப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கும் தொடுக்கப்பட்டு நீதிமன்றமும் இது தொடர்பாக அப்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயக்தா அமைப்பு நிறுவப்பட்டது. இதில் லோக் ஆயக்தா தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் அதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நீதிபதி தேவதாஸ் தலைமையிலான தமிழக லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்கள் நியமனத்தில் விதிமீறல் நடந்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.இப்படி கடந்த ஆட்சியில் லோக் ஆயுக்தா சர்ச்சைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் இன்றைய (ஜூன் 21) ஆளுநர் உரையில், “தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப் பணி ஆணையரகம் (விஜிலென்ஸ்) முடுக்கிடப்பட்டு நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச் சேவைகளை முறைப்படுத்திட சேவைகள் உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்”என்று கூறப்பட்டுள்ளது.
லோக் ஆயுக்தா மட்டுமல்ல தமிழக விஜிலென்ஸ் ஆணையரகம் முடுக்கிவிடப்படும் என்பதன் மூலம் கடந்த ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீது அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான விசாரணை விரைவுபடுத்தப்படும் என்பதையே ஆளுநர் உரை தெரிவிக்கிறது. இதனால் மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் விசாரணை விரைவில் தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடத்தில் திமுக ஊழல் புகார்களை பட்டியலிட்டது குறிப்பிடத் தக்கது. அதே ஆளுநரே இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணை விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.