நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டமுன்வடிவு

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த தேர்வைக் கொண்டு வந்தது முதலே தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், 2017 முதல் தொடர்ந்து நீட் தேர்வு மூலமே மருத்துவ சேர்க்கை நடந்து வருகின்றன. இதன் காரணமாகக் கிராமப்புற மற்றும் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வால் தங்களது மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்துவிடுமோ, மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சத்தில் மாணவி அனிதா தொடங்கி சுமார் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ’நீட் தேர்வை ரத்து செய்யக் கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்’என்று வாக்குறுதி அளித்தது.

அதற்கேற்ற வகையில் நீட் தாக்கம், பாதிப்பு, மாற்று வழி குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு. அதோடு கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதமரைச் சந்தித்த முதல்வர், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதே சமயத்தில், “நீட் தேர்வு இந்த நிமிடம் வரையில் நடைமுறையில் இருப்பதால் அதற்கு மாணவர்கள் தயாராகும் சூழல் இருக்கிறது. இது மாணவர்களின் கடமை. நீட் தேர்வுக்குத் தயாராவதால் எந்த வித பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில், இன்று 16ஆவது சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. முதல் நாளான இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். அப்போது, “முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி, நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்” என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment