பிரபல தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, இயக்குநர் லிங்குசாமி மீது தெலுங்கு திரைப்பட சம்மேளனத்தில் புகார் செய்திருக்கிறார்
தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு சிரீஷின் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குவதாக இருந்தது.
இந்தப் படத்தின் பூஜை கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னையில் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சிவக்குமார்தான் குத்துவிளக்கேற்றி இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார்.
அதன் பிறகு இந்தப் படம் சம்பந்தமான எந்த வேலைகளும் நடைபெறவில்லை
லிங்குசாமி பல்வேறு பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவித்ததால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஞானவேல்ராஜா.
இந்தப் படம் நின்றுபோனதால் வேறொரு படத்தை இயக்கித் தருவதாக லிங்குசாமி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவுக்கு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னதுபோல் லிங்குசாமி செய்யவில்லை என்கிறது ஞானவேல்ராஜா தரப்பு
நீண்ட போராட்டம், முயற்சிகளுக்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். நாயகனாக ராம் பொத்தினேனி நடிக்கவிருக்கும் இந்தப் படத்திற்கான தொடக்கப் பணிகள் முடிந்து அடுத்தக் கட்ட வேலைகளைத் துவங்கவிருந்த நேரத்தில் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
முதலில் என் தயாரிப்பில் ஒரு படத்தை அவர் இயக்கித் தர வேண்டும். அல்லது வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தர வேண்டும். அதன் பின்புதான் அவர் அடுத்தப் படத்தை இயக்க வேண்டும். என்று ஞானவேல்ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஏற்கெனவே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் ஆகியவற்றிலும் புகார் செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா.
இப்போது தெலுங்குலகின் சினிமா அமைப்புகளான தெலுங்கு சினிமாதயாரிப்பாளர்கள் சங்கம், தெலுங்கு திரைப்பட சம்மேளனம் ஆகியவற்றிலும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
படத்தின் ஹீரோவான ராம் பொத்தினேனி இதைக் கேள்விப்பட்டு தற்போது பின் வாங்கிவிட்டாராம். முதலில் லிங்குசாமியை அவருடைய பிரச்சினைகளை முடித்துவிட்டு வரச் சொல்லுங்கள். அப்புறம் நம் பட வேலைகளைத் துவக்குவோம்என்று சொல்லிவிட்டாராம்.
ஆக, மிக விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.