‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா – தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா – தனது முதல் படைப்பான ‘உப்பென்னா’ எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வெங்கட சதீஷ் கிலாரு திரைப்பட தயாரிப்பில் கால் பதிக்கிறார்.
இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, படக் குழுவினர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உப்பென்னா திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட். இப்படத்தை இயக்கிய புச்சி பாபு சனாவின் இரண்டாவது படமும் மியூசிக்கல் ப்ளாக் பஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏ. ஆர். ரஹ்மான் – இந்திய சினிமா வரலாற்றில் வெற்றிகரமான இசை அமைப்பாளர்களில் ஒருவர். அவர் நாடு முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றவர். ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு உலக அளவில் பிரபலமானார். ரஹ்மானின் இசை உலகளாவியது. அவர் இந்த பான் இந்திய படைப்பிற்கு இசையமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ரசிகர்களை ஈர்க்கும் காரணிகளில் ஒன்றாகவும் அவர் திகழ்வார்.
இயக்குநர் புச்சி பாபு சனா ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். அந்தக் கதை உலகளாவிய கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.