“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” ; ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்..

பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார்.

 

 

Related posts

Leave a Comment