கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த ‘பிரமயுகம்’ படத்தை, ‘பூதகாலம்’ புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக முதலில் மலையாளத்தில் மட்டுமே வெளியாகிறது. படக்குழுவினரும் இதன் அசல் பதிப்பு ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என உறுதியாக நம்புகின்றனர். மேலும் மொழியியல் தடைகளைப் பொருட்படுத்தாமல் இது பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும் என்கின்றனர்.
‘பிரமயுகம்’ படத்தின் டப்பிங் வெர்ஷனின் வெளியீட்டு தேதியை விரைவில் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர். மாயம், மாந்திரீகம் போன்ற விஷயங்கள் நிறைந்த ஒரு சகாப்தத்தில் கேரளாவில் கதை விரிவடைகிறது. அங்கு ஒரு நாட்டுப்புறப் பாடகர் அடிமைச் சந்தையில் இருந்து தப்பித்து மர்மமான ஒரு மாளிகையில் சிக்குகிறார். படத்தை முழுவதுமாக கருப்பு மற்றும் வெள்ளையில் மட்டுமே படமாக்கி வெளியிடுதல் என்ற துணிச்சலான, ஆக்கப்பூர்வமான முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளனர்.
இந்த பன்மொழி படத்தின் டிரெய்லர் அபுதாபியில் மம்முட்டி மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. படத்தின் சுவாரஸ்யத்தை பாதிக்காமல் இதில் உள்ள த்ரில்லிங் காட்சிகள், மாய கூறுகள், சிறந்த தொழில்நுட்ப நுணுக்கம் போன்றவற்றைச் சிறப்பாகக் கொடுத்துள்ளதாகப் படக்குழு உறுதியளிக்கிறது. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் S. சஷிகாந்த் ஆகியோர் தயாரித்திருக்கும் ‘பிரமயுகம்’ படத்திற்கு TD ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு செய்துள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கும் இந்தத் த்ரில்லருக்கு ஜோதிஷ் ஷங்கர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த இசையும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
ஹாரர்- த்ரில்லர் படங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் தயாரிப்பு – ‘பிரமயுகம்’. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து ‘பிரமயுகம்’ படத்தை வழங்குகின்றன.
—
சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் தயாரித்த ‘பிரமயுகம்’ படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.