ராயன் விமர்சனம் : ரணகளம் செய்யும் தனுஷ்

கதை…

தனுஷ் சந்திப் கிஷன் காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய நால்வரும் அண்ணன் தங்கை.. சிறுவயதிலேயே இவர்கள் பெற்றோரை இழந்து விட்டதால் தன் தம்பிகளையும் தங்கையையும் பாதுகாப்பாக பார்த்து வளர்த்து வருகிறார் தனுஷ்..

இவர்களின் நிலை அறிந்த செல்வராகவன் அவர் குடும்பத்திற்கு உதவுகிறார்.. இதனால் செல்வா மீது தனுஷ் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்.. தந்தை ஸ்தானத்திலிருந்து செய்து வருகிறார்..

இவர்கள் இரவு நேர ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர்

காளிதாஸ் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆனால் சந்திப் தவறான பழக்க வழக்கங்களால் நிறைய பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வருகிறார்.. இதனால் அடிக்கடி அண்ணன் தனுஷுக்கும் தம்பி சந்திப்புக்கும் மோதல்கள் வெடிக்கிறது.

ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு பாரில் பிரச்சனை செய்யும் போது தவறுதலாக வில்லன் சரவணன் மகனை கொன்று விடுகிறார் சந்தீப். இதனால் சரவணன் தனுஷுக்கு எச்சரிக்கை விடுகிறார்..

இனிமேல் உனக்கு ஒரு தங்கை ஒரு தம்பி மட்டும் நினைத்துக் கொள்.. 24 மணி நேரத்திற்குள் உன் தம்பி சந்தீப்பை ஒப்படைத்து விடு.. இல்லை என்றால் உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என எச்சரிக்கிறார்.

அதன் பிறகு தனுஷ் என்ன செய்தார்? தன் தம்பிகளுக்காக வில்லனை எதிர்த்து நின்றாரா.? அல்லது தம்பியை விட்டுக் கொடுத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்…

படத்தின் நாயகன் இயக்குனர் இரண்டுமே தனுஷ் தான்.. தனுஷ் நடிப்பில் இது 50-வது படமாகும். நிறைய நடிகர்களுக்கு அவர்களது 50வது படம் தோல்வியை கொடுத்திருக்கலாம்.. ஆனால் தனுஷ் அசத்தியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

அதுவும் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்துவிட்டார் தனுஷ்.. அலட்டிக் கொள்ளாத அறிமுகம் அசத்தலான நடிப்பு அசுரவேக இயக்கம் என அனைத்திலும் தனுஷ் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்..

முக்கியமாக ஒரு இயக்குனர் நினைத்து இருந்தால் நாயகனுக்கு ஹீரோயின் கொடுத்து டூயட் வைத்திருக்கலாம்.. ஆனால் எந்த டூயட்டும் வேண்டாம் நாயகியும் வேண்டாம் என ஒற்றை ஆளாகவே நாயகனாக ஜொலிக்கிறார் தனுஷ்.

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அபர்ணா பால முரளி.. இருவருக்கும் பக்கா கெமிஸ்ட்ரி. அபர்ணா தன் குண்டு உடலை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.. அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார் சந்திப்.. இவரே வில்லத்தனமும் செய்து இருப்பது சிறப்பு.

அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்ட தம்பியாக காளிதாஸ் ஜெயராம்.. நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் இவருக்கும் தனுஷுக்கும் ஒரு சின்ன சண்டை வருவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ளப்படியாக இல்லை.

சார்பட்டா பரம்பரை & அநீதி ஆகிய படங்களில் நாயகி துஷாரா விஜயன் தங்கை வேடத்தில் ஜொலிக்கிறார்.. அண்ணனுக்காக எதையும் செய்வேன் என்ற இவரது துணிச்சல் பாராட்டுக்குரியது இவரது நடிப்பும் போற்றும் படியாக இருக்கிறது.

வில்லன்களாக சரவணன் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் அவர் அவர்களின் பங்களிப்பில் பக்கா மாஸ் காட்டி இருக்கின்றனர்.

சைலன்ட் வில்லனாக பிரகாஷாக ஜொலிக்கிறார். இவர் போடும் திட்டங்கள் அனைத்தும் வேற லெவல் ரகம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு எடிட்டிங் இரண்டும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக அமைந்திருக்கிறது.. படத்தின் பெரும்பால காட்சிகள் இருட்டில் படம் ஆக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து செய்து இருப்பது சிறப்பு..

தனுசுக்கு ஏற்றது போல ஏ ஆர் ரகுமான் வடசென்னை பாணியில் இறங்கி தரக்குத்து லோக்கல் குத்து என பின்னணி இசையில் தெறிக்க விட்டு உள்ளார்.

அடங்காத அசுரன்… வாட்டர் பாக்கெட் ஆகிய பாடல்கள் பட்டையை கிளப்பி இருக்கின்றன..

வெறுமனே கேங்ஸ்டர் படம் என்று இல்லாமல் அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் படமாகவும் அதே சமயம் பக்கா கமர்சியல் படமாகவும் தனுஷ் கொடுத்திருப்பது சிறப்பு..

குடும்ப செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும் படத்தில் ஏகப்பட்ட வன்முறை இருப்பதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..

தனுஷுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்..

ஆக ராயன் படத்தின் மூலம் ரணகளம் செய்து விட்டார் தனுஷ்.

ராயன்  : 4/5 

Related posts

Leave a Comment