வாஸ்கோடகாமா திரை விமர்சனம் – நெகட்டிவ் உலகம்

கதை…

நல்லவனுக்கு பெண் கொடுக்க மாட்டோம்.. நல்லவனாக இருந்தால் வாழ விடமாட்டோம் என்ற நோக்கத்தில் ஊரில் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

பிக் பாக்கெட் அடிப்பவன் கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலைகாரன் உள்ளிட்டவர்கள் மட்டுமே வாழும் நாட்டில் நல்லவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நகுலுக்கு கல்யாணம் கட்டி வைக்க தீர்மானித்து முனிஷ்காந்த் திட்டம் போடுகிறார்.

அதன்படி ஆனந்தராஜின் மகள் அர்த்தனா பினுவை பெண்பார்க்க செல்கிறார்.. அங்கு இவன் மோசமானவன் அக்மார்க் அயோக்கியன் என்று கூறி கட்டி வைக்க முயல்கிறார்.. திருமணத்தின்போது நகுல் அயோக்கியன் அல்ல நல்லவன் என்று தெரிந்து விடுகிறது.

இதனால் திருமணம் நின்று போகிறது.. அதன் பிறகு அவன் ஜெயிலுக்கு செல்கிறார்.. அங்கு திருடர்கள் எல்லாம் நல்லவர்களாகவும் போலீஸ் எல்லாம் மகா கெட்டவர்களாக இருக்கிறார்கள்.

வரும் கைதிகளுக்கு கற்பழிப்பது எப்படி? கொள்ளை அடிப்பது கொலை செய்வது எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்? அதன் பிறகு அங்கு என்ன கூத்து எல்லாம் நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நகுல் நாயகியாக அர்த்தனா பினு நடித்திருக்கிறார்கள்.. இவர்களுடன் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்சிலி, படவா கோபி நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நகுல் துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நெகட்டிவ் மனிதர்களிட சிக்கிக் கொண்டு அவர்படும் அவஸ்தைகளை நடிப்பில் உணர வைத்திருக்கிறார்.. ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்..

வழக்கமான ஹீரோயின் போல அர்த்தனாவுக்கு வேலை இல்லை.. ஆனால் கொடுத்த காட்சியில் கொஞ்சம் அழகாக வந்து ஏதோ நடிக்க முயற்சித்து இருக்கிறார்.

படத்தில் பாராட்டுக்குரியவர் ஆனந்தராஜ்.. அவர் வரும் காட்சிகளில் கொஞ்சம் சிரிக்க தோன்றுகிறது.. கே எஸ் ரவிக்குமார் டபுள் கேரக்டரில் வந்து படத்தின் திருப்புமுனைக்கு உதவி இருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அருண் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்..

உறியடி, பைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இவர்கள் இந்த திரைக்கதைக்கு எப்படி உதவ வேண்டுமோ அந்த பணியை நேர்த்தியாக செய்து இருக்கின்றனர்.

சோகக் காட்சியில் கூட ஜாலியான மியூசிக் போட வேண்டும் என்ற கட்டளையில் இசை அமைப்பாளர் அருணும் தன் பங்கிற்கு வச்சி செய்திருக்கிறார்.. ஆனால் நம்மால் தான் முடியவில்லை..

‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்று வழங்கி உள்ளது.. ‘வாஸ்கோடகாமா’ படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது..

அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் (RGK) என்பவர் இந்தப் படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியுள்ளார்..

இந்த காலத்தில் நல்லவங்க எல்லாம் வாழ முடியாது.. நல்லவனா இருக்க முடியாது என்ற என்ற பேச்சுக்களை பலமுறை கேட்டிருப்போம்.. இது கருவாக எடுத்து கலிக்காலம் முத்தி போச்சு என்பதை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

அதாவது ஒருவேளை கலிகாலம் முக்தி போனால் என்ன ஆகும் இந்த நாட்டின் நிலைமை? என்பதை காமெடி கலந்து கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஆர் ஜி கே..

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் நெகட்டிவ் நிறைந்த உலகில் ஒரு நல்லவனால் வாழ முடியுமா அப்படி நல்லவன் வாழ்ந்தால் அவனை நிலை என்னவாகும் என்பதை தான் இயக்குனர் சொல்ல முயற்சித்துள்ளார்.. ஆனால் சொல்ல வந்த விதத்தில் தடுமாறி திரைக்கதையை குழப்பி இருக்கிறார்..

காமெடியன்கள் நிறைந்த இந்த கதையில் கொஞ்சம் காமெடியை நிலை நிறுத்தி இருந்தால் இந்த படம் பாராட்டுக்களை குவித்திருக்கும்..

வாஸ்கோடகாமா – 3/5.. நெகட்டிவ் உலகம்

Related posts

Leave a Comment