கதை…
வீராயி (பாண்டி அக்கா). இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.. (வேலராமமூர்த்தி மாரிமுத்து தீபா ஷங்கர்).. கணவனை இழந்த வீராயி பிள்ளைகளை நன்றாக வளர்த்து வருகிறார்..
3வது மகன் சென்னையில் சென்று காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்திற்குள் முதல் பிளவு வருகிறது.
ஒரு கட்டத்தில் விவசாயம் நஷ்டம் அடைய பஞ்சம் பிழைக்க திருப்பூருக்கு செல்கிறார் தன் மனைவி மகனுடன் வேலைக்கு செல்கிறார் வேல ராமமூர்த்தி..
அப்போது மாரிமுத்துவின் மனைவிக்கும் மாமியார் வீராயிக்கும் மாமியார் மருமகள் சண்டை தொடங்குகிறது.. இதனால் குடும்பத்தில் சொத்தை பிரிக்க வேண்டும் என்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் இதற்கு வேலராம மூர்த்தியும் சம்மதிக்க குடும்பம் பிரிகிறது..
இதனையடுத்து குடும்பம் பிரிந்த சோகத்தில் வீராயி மரணம் அடைகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? குடும்பம் ஒன்றாக ஆனதா? அம்மாவை இழந்த பின் அண்ணன் தம்பிகள் என்ன செய்தனர்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்…
கதையின் நாயகனாக வேலராமமூர்த்தி மாரிமுத்து பாண்டியக்கா தீபா ஷங்கர் உள்ளிட்ட அனைவரையும் சொல்லலாம்.. போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு கேரக்டரில் ஸ்கோர் செய்திருக்கின்றனர்.. அண்ணனுக்கே உரித்தான கம்பீரம் என வழக்கம்போல கிராமத்து மனிதராக வாழ்ந்து இருக்கிறார் வேலராமமூர்த்தி.
மனைவியின் பேச்சைக் கேட்டு வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் மாரிமுத்து அசத்தியிருக்கிறார்.. சின்ன சின்ன சண்டை போட்டு மாமியாரிடம் மோதும் செந்தி கேரக்டர் மருமகள் மீதான வெறுப்பை உண்டாக்குகிறது.
குடும்பம் பிரிந்த சோகத்தில் அழும் வீராயி நம்மையும் அழ வைக்கிறார். அதுபோல அண்ணன் பாசத்திற்காக ஏங்கும் தங்கை கேரக்டரில் தீபா நடிப்பு தீப்பொறியாக மாறியிருக்கிறார்.
முறைப்பெண் நந்தனா முறை மாமன் சுரேஷ் நந்தா உள்ளிட்டோரும் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.. தண்டட்டி பாட்டியாக வருபவர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.. அண்ணன் தம்பிகள் ஒன்று சேர வேண்டும் என அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அப்பாவி மனிதர்களின் அன்பை காட்டுகிறது..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வீராயி மக்கள்.
எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். முகன்வேல் எடிட்டிங் செய்திருக்கிறார். அனைவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
சுசீந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகராஜ் கருப்பையா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இன்று 2K கிட்ஸ் பார்க்க முடியாத கூட்டுக் குடும்ப கதையை மண்மனம் மாறாமல் குடும்ப செண்டிமெண்ட் உடன் உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. பல காட்சிகளில் குடும்பத்தின் வலிமையும் அண்ணன் தம்பி உறவையும் அக்கா தம்பி பெரியம்மா சித்தப்பா மாமா அத்தை அப்பத்தா அத்தாச்சி என உள்ளிட்ட உறவுகளின் உணர்வை அழகாக சொல்லி இருக்கிறார்.
கிராமத்து மண்ணுக்கே உரித்தான இசையை மண்வாசனை உடன் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி.. சுரேஷ் நந்தா மற்றும் நந்தனாவின் காதலும் காதல் பாடலும் அருமை.. பாடல் வரிகளும் தலைஅசத்தி தாளம் போட வைக்கிறது.
கிராமத்து படம் என்றாலும் மது புகை என குறிப்பிடாமல் அழகாக காட்சிகளை வடிவமைத்து இப்படியும் படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.