செம்பியன் மாதேவி – விமர்சனம் 3/5

 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’.

கதை…

செம்பியன் என்ற கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் நடக்கும் கதை.. நாயகன் வீரா நாயகி மாதேவி..

தன் வீட்டு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் நபரின் மகளைக் காதலிக்கிறார் நாயகன் வீரா.. நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் நாயகி கர்ப்பமாகிறாள். இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறால் நாயகி மாதேவி.. ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் நாயகன் வீரா.

அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? உண்மையாக காதலித்த நாயகன் திருமணம் செய்ய மறுப்பது ஏன்.? என்பதெல்லாம் மீதிக்கதை.

நடிகர்கள்…

படத்தை தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்திருக்கிறார் லோகு பத்மநாபன்.. அன்றாடம் பார்க்கும் கிராமத்து இளைஞனாக கவர்கிறார்.. மேக்கப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் (பட்ஜெட் பற்றாக்குறையா.?)

நாயகி அம்சலேகா இவரது அறிமுகக் காட்சி அசத்தல்.. பெரிய மேக்கப் இல்லாமல் கிராமத்தை பைங்கிளி ஆகவே வலம் வருகிறார்.. தன் குடும்பத்திற்காக முதலில் காதலை மறுக்கும் இவர் பருவ வயது காரணமாக காதலை ஏற்கும் தருணங்கள் ரசிக்கத்தக்கவே.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது முடிவு சோகமானாலும் இவர் எடுக்கும் போராட்டம் பாராட்டுக்குரியது.

மற்றொரு நாயகியாக கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினா.. குண்டாக குள்ளமாக இருந்தாலும் ரசிக்கத்தக்க நடிப்பை கொடுத்து கவர்கிறார்..

பல படங்களில் வில்லனாக மிரட்டிய மணிமாறன் இந்த படத்தில் ஜாதி கட்சி தலைவராக வருகிறார்.. அவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதுபோல முருகேசன் கேரக்டர் மற்றும் மாடு முட்டி கேரக்டர் ஆகியவை கவனம் பெறுகின்றன.. முக்கியமாக இவர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்.

மற்றபடி படத்தில் நடித்துள்ளவர்கள் கிராமத்து மனிதர்களாகவே தங்களது கேரக்டர்களில் பளிச்சிடுகின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி இசை ஏ.டி.ராம் அமைத்திருக்கிறார்.

சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்க மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

ஜெ.கார்த்திக் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் அதனை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்.. பெரும்பாலும் காதல் பாடலை இடம் பெறுவதால் கொஞ்சம் வித்தியாசம் காட்டிருக்கலாம். அதாவது ஒரு பாடல் நாயகன் நாயகியை வைத்து மறு பாடலில் குரூப் டான்ஸ் வைத்திருக்கலாம்.. எல்லா பாடல்களும் ஒரே மாதிரியாக இருப்பது போர்..

ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது…

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாதி வெறியர்களால் காதலுக்கு சமாதி தான் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் சாதியை பிரிக்க சாதியை எதிர்க்க ஒரே ஆயுதம் காதல் தான்.. அதை எந்த கட்டத்திலும் மறுக்க முடியாது என்பதையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

நாயகன் லோக பத்மநாபன் இசை அமைத்து எழுதி நாயகனாவும் நடித்திருக்கிறார்.. என்னதான் இவர் நாயகனாக இருந்தாலும் நாயகியை மையப்படுத்தி படத்திற்கு தலைப்பு வைத்து கிளைமாக்ஸ் காட்சியில் நாயகிக்கு முக்கியத்துவம் வைத்து முடித்திருப்பது இயக்குனரின் டச்..

Related posts

Leave a Comment