கதை…
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. கொலைக்கான காரணம் என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கையில் சில தினங்களில் அவரது மனைவியும் கொல்லப்படுகிறார்.
இதனால் இவர்களது மகள் நிக்கி கல்ராணி மிகுந்த சோகத்தில் இருக்கிறார்.. தன் பெற்றோரின் கொலைக்கு என்ன காரணம் கொலை செய்தவர்கள் யார் என விசாரணையில் இறங்குகிறார் மகள்.
அப்போது இவரது சந்தேகம் அர்ஜுன் மீது விழுகிறது.. இதனையடுத்து அர்ஜுனை கொல்ல திட்டமிடுகிறார்..
அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்..? நிஜமாகவே நிக்கி பெற்றோர்களை அர்ஜுன்தான் கொலை செய்தாரா? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் அர்ஜுன்.. தனக்கு படத்தில் ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர்ஸ் செய்ய முடியும் என முடிவெடுத்து விட்டார் போல..
கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார் நிக்கி கல்ராணி… முகேஷ் மற்றும் அவரது மனைவி நிறைவான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. பாலு அண்ணா கேரக்டரில் வருபவர் பண்பட்ட நடிப்பை கொடுத்து அடிதடியிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.
ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனைக்கு உதவியிருக்கிறது.. அவரது முகம் ஃபோட்டோவில் மட்டுமே காட்டப்பட்டது.. எனவே அவருக்கு வேலை இல்லை என நினைத்தால் திடீரென கிளைமாக்ஸ் காட்சியில் வந்து அதிரடியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
ஆனால் ஹரிஷ் நரபலி கொடுக்கும் விதமும் அதற்கான காரணமும் எந்த லாஜிக்கும் ஒட்டவில்லை. தன் குடும்ப வளர்ச்சிக்காக நரபலி என்று சொல்லும் அவர் குடும்பத்தையே அழிப்பதன் நோக்கம் என்ன.?
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் ஓகே.. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருப்பது படத்தின் உயிரோட்டத்திற்கு உதவியிருக்கிறது..
ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளின் காட்சிகள் வியக்க வைக்கிறது.. முக்கியமாக அர்ஜுன் வசிக்கும் அந்த வீடும் அந்த இரவு நேர சீன்களும் அதற்கு ஏற்ப லைட்டிங்கும் கொடுத்திருப்பது சிறப்பு..
மலையாள இயக்குனர் தாமரக்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.. முதலில் திரில்லர் கொலை போலீஸ் விசாரணை என செல்லும் திரைக்கதை கடைசி 20 நிமிடங்களில் நரபலி எனும் வேறு ஒரு கிளை கதையை தொடங்கி முடித்திருக்கிறார்..
கிளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் பேசும் நரபலி தொடர்பான வசனங்கள் கைதட்ட வைக்கிறது. முக்கியமாக நரபலியை படிக்காதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் பணக்காரர்களும் செய்கிறார்கள்.. எனவே அதை தடுக்க மாநில அரசுகள் முன் வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்..
ஆக இந்த விருந்து.. ஆக்சன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து