லப்பர் பந்து விமர்சனம் 4.5/5.. பறக்கும் பந்து

 கதை…

தினேஷ் ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..

தினேஷ் மற்றும் ஹரிஷ் இருவரும் கிரிக்கெட் வெறியர்கள்..

இதில் தினேஷ் (கெத்து) – அவர் விஜயகாந்த் ரசிகர்.. ஹரிஷ் (அன்பு) இவர் விஜய் ரசிகர்

20 வயது ஆகும் முன்பே தன் காதலியை கரம் பிடித்தவர் தினேஷ்.. இவருக்கு 20 வயது மகள் இருக்கும்போது இவருக்கு கிரிக்கெட் வீரன் ஆர்வம் குறையவில்லை இதனால் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வருகிறது..

மேலும் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷுக்கும் ஹரிஷுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது..

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹரிசை காதலிக்கிறார் தினேஷ் மகள் சஞ்சனா..

ஏற்கனவே தினேஷின் கிரிக்கெட் ஆர்வத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஸ்வஸ்விகா மகளின் காதலை எதிர்க்கிறார்..

இதன் பிறகு என்ன நடந்தது.? கிரிக்கெட் மருமகனை ஸ்வஸ்விகா தினேஷ் ஏற்றுக் கொண்டாரா.? என்பது மீதிக்கதை..

நடிகர்கள்…

தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஸ்வஸ்விகா சஞ்சனா, காளி வெங்கட், பாலசரவணன் ஜன்சன், ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டரில் ஜொலிக்கின்றனர்..

கிரிக்கெட்டில் மட்டுமல்ல நடிப்பிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் தினேஷ் மற்றும் ஹரிஷ்..

தினேஷ் மனைவியாக வரும் ஸ்வஸ்விகா நடிப்பை பாராட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியாது.. அவருக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.. இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக இருந்தாலும் தமிழில் கோரிப்பாளையம் படத்தில் நடித்திருக்கிறார்.. இந்தப் படத்தில் கிரிக்கெட் விளையாடாமலே தன் நடிப்பில் சிக்சர் அடித்திருக்கிறார்..

ஒரு பக்கம் அப்பா.. ஒரு பக்கம் காதலன்.. இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்றாலும் அம்மாவின் எதிர்ப்பால் காதலனுக்காக காத்திருக்கும் தவிப்பை சஞ்சனா அழகாக காட்டியிருக்கிறார்..

தினேஷின் நண்பனாக ஜென்சன் ஹரிஷின் நண்பனாக பால சரவணன் இருவரும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. தன்னுடைய நண்பன் கிரிக்கெட் விளையாடும் போது இவரின் கமெண்ட்டுகள் ரசிக்கத்தக்கவை

கமெண்ட்ரி கொடுக்கும் ஆதித்யா கதிரும் அதிர அதிரடியான கமெண்ட் போட்டுக் கவர்கிறார்..

சீனியர் பிளேயர் காளி வெங்கட்டும் அவரது மகளும் இணைந்து கிரிக்கெட் ஆடும் காட்சி ரசிக்க வைக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் இயக்கம் ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசை என ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம்..

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்தாலும் பல இடங்களில் விஜயகாந்த் பட பாடல்களே ஒலிக்கின்றன.. இளையராஜா மற்றும் தேவா இசையமைத்த விஜயகாந்த் பாடல்களை கேட்டு கேப்டன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவது நிச்சயம்..

சில்லாச் சிறுக்கி பாடல் தாளம் போட்டு ஆட்டம் போடவும் வைக்கிறது…

மதன் எடிட்டிங் செய்ய தினேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ரொமான்ஸ் நட்பு கிரிக்கெட் என ஒவ்வொன்றையும் அழகான காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

பொதுவாக கிரிக்கெட் பணக்கார விளையாட்டு என்ற தோற்றம் எப்போதுமே இருக்கிறது.. ஆனால் இதில் முழுக்க முழுக்க லப்பர் பந்து வைத்து கிரிக்கெட் ஆடும் வீரமிக்க இளைஞர்களை காட்டி நம்மை மேட்ச் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

கிரிக்கெட் என்றால் அந்த ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும்… ஆனால் தன் படத்தை எல்லோரும் ரசிக்க வேண்டும் என மாமியார் மருமகள் அன்பை அழகாக காட்டியிருக்கிறார்..

அதுபோல பாட்டியுடன் சண்டை போடும் பேத்தி மாமனாருடன் மல்லுக்கட்டி நிற்கும் மாப்பிள்ளை.. விளையாட்டே கதி என்று நிற்கும் புருஷனை கண்டிக்கும் மனைவி என வெரைட்டி சேர்த்து விருந்து படைத்திருக்கிறார்.

மாமனார் தினேஷுக்கு விஜயகாந்த் பாட்டு.. மாப்பிள்ளை ஹரிஷுக்கு விஜய் பாட்டு என கேப்டன் மற்றும் தளபதி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.. அதிலும் விஜயகாந்த் பாட்டு வரும் சீன்கள் எல்லாம் மெய்சிலிர்க்கிறது..

வழக்கமாக முடியும் கிரிக்கெட் மேட்ச் தான் கிளைமாக்ஸ் என்றாலும் அதிலும் நாயகர்களை தோற்கவைத்து அதற்கு விளக்கம் கொடுத்து படத்தை முடித்து இருப்பது இயக்குனரின் டச்..

முக்கியமாக விளையாட்டில் சாதி கூடாது அது வினையாகிவிடும் என்பதையும் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து..

ஆக மொத்தம் லப்பர் பந்து.. பறக்கும் பந்து

Related posts

Leave a Comment