கதை…
தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார்.
இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்..
அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார்.
அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.
நடிகர் – நடிகையர் :
சமூக சிந்தனை ஆக்சன் ரொமான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் என வெரைட்டி காட்டி இருக்கிறார் விஜய் ஆண்டனி.. முக்கியமாக நாயகி ரியாவை சுற்றி சுற்றி காதல் செய்வது செம. இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷனில் மாஸ் காட்டிருக்கிறார்.
துறுதுறு பெண்ணாக ரியா சுமன் கவர்கிறார்.. இவரது பிளாஷ்பேக்கில் விஜய் ஆண்டனி தொடர்பு திரைக்கதையின் திருப்புமுனை..
கம்பீரமான மிரட்டலான போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் கலக்கி இருக்கிறார்.. கொள்ளையன் யார்?என அவர் விசாரிக்கும் தோரணையே செம..
நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசியல்வாதியாக சரண்ராஜ் மிரட்டி இருக்கிறார்.. அதுபோல இவரது தம்பியாக இயக்குனர் தமிழும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிறுசு என்ற கேரட்டில் வரும் அந்த குள்ளமான மனிதரும் நடிப்பில் கெட்டி..
மற்றொரு அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பில் கவர்கிறார்.. இவர்களுடன் ரெட்டின் கிங்சிலி மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் விட பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.. திரில்லர் படங்களை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது..
நவீன் குமார் ஒளிப்பதிவில் சென்னை ட்ரெயின் காட்சிகளும் கிராமத்துக் காட்சிகளும் பாலம் அமைக்கும் காட்சிகளும் கொள்ளை அழகு..
சரத்குமார் விக்ரம் பிரபு ஐஸ்வர்யா ராதிகா நடித்த வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
அரசியல்வாதியின் கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது எப்படி? கொள்ளை அடிக்கும் நபர் யார் என்ற திரில்லரை வைத்து இடைவேளை வரை நகர்த்தி இருக்கிறார்.. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ட்விஸ்ட் காட்சிகள் வரும்போது நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இதற்கு முன்பு சில படங்களை நினைவு படுத்தினாலும் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்து நகர்த்தி இருப்பது சிறப்பு.
ஆக ஹிட்லர்.. ரசிக்கலாம்..